சிறுநீரக நோயாளிகளுக்கு வீட்டிலேயே டயாலிசிஸ்..!
சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து டயாலிசிஸ் செய்து கொள்ளாமல் வீட்டிலிருந்தவாறே டயாலிசிஸ் செய்யும் முறையை செயல்படுத்தி உள்ளது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட மச்சுவாடி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த 15ம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை அல்லது 3 முறை மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்து கொள்வது வழக்கம். இதனால் காலவிரயம், பொருளாதார இழப்பு போன்றவை ஏற்படுவதுண்டு. ஆனால் அதற்கு மாற்றாக வீட்டிலிருந்ததே சிகிச்சை செய்யும் முறையினை மேற்கொண்டுள்ளார் அருண்குமார். இந்தமுறை பெரிடோனியல் டயாலிசிஸ் என்று கூறுகிறார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம்
புதிய சிகிச்சையால் கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு அடிக்கடி வருவது தவிர்க்கப்படுவதாகக் கூறிய மீனாட்சி சுந்தரம், ஹீமோ டயாலிசிஸ் செய்து கொள்வதனால் ஏற்படும் பின் விளைவுகளும் குறிப்பாக நோய்த்தொற்று இதன்மூலம் தவிர்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு லிட்டர் முதல் 3 லிட்டர் வரை டயாலிசிஸ் திரவம் தேவைப்படலாம் என்று தெரிவித்த அவர், ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை செலவாகக் கூடிய இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.