தமிழகம்

அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகள் மூடப்படுகின்றன

தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் தொடக்க கல்வி இயக்குனரகத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். மெட்ரிக்குலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மெட்ரிக் இயக்குனரிடம் அங்கீகாரம் பெற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளிகளை ஆய்வு செய்து அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 760 நர்சரி பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது கல்வி துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து அந்த தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளாக இருந்தால் 33 சென்ட் நிலமும், நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து பகுதியாக இருந்தால் 1, 2 மற்றும் 3 ஏக்கர் நிலமும் வேண்டும்.
இது தவிர பள்ளி கட்டிடத் தன்மை, தீ பாதுகாப்பு சான்றிதழ், சுகாதாரத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று ஆகியவை பெற வேண்டும். சுமார் 2 ஆயிரம் தனியார் பள்ளிகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 760 நர்சரி பள்ளிகள் இதுவரையில் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதால் அதனை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும் இந்த பள்ளிகளுக்கு மேலும் ஒரு கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இந்த வாரத்திற்குள் அங்கீகாரம் பெறவில்லையெனில் இந்த மாத இறுதியில் பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்க தயாராக உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் தான் 86 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் உள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 55 பள்ளிகளும், அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் கூறும்போது, “அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை மூடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ள 760 நர்சரி பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் உள்ளனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அரசு பள்ளிகளை நடத்துகிறார்கள்.
ஆனால் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். 760 நர்சரி பள்ளிகளில் தகுதியான பள்ளிகளுக்கு அரசு அனுமதி உடனே வழங்க வேண்டும். அதிகாரிகள் தாமதம் செய்வதாலும், அலட்சியத்தாலும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. மெட்ரிக்குலேசன், மேல்நிலைப் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி தர வேண்டும். கட்டிட அனுமதி தொடர்பாக கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசு இன்னும் தெளிவான முடிவுகளை அறிவிக்கவில்லை. இதனால் அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அரசின் காலதாமதத்தால் தனியார் பள்ளிகள் பாதிக்கப்படுகின்றன. விரைந்து முடிவு எடுத்து அறிவித்தால் அங்கீகாரம் புதுப்பிக்கும் நடைமுறைகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நடைபெறும்.” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button