திருமலையில் தமிழக அரசின் விருந்தினர் மாளிகை..
திருமலையில் தமிழக அரசின் விருந்தினர் மாளிகை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் மாநில அரசு சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டி தெரிவித்தார்.
திருமலையில் தென்னிந்திய மாநிலங்களின் விருந்தினர் மாளிகைகள் பல உள்ளது. ஆனால் ஏழுமலையானை அதிக அளவில் தரிசிக்க வரும் தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக திருமலையில் தமிழக அரசு சார்பில் விருந்தினர் மாளிகைகள், ஓய்வறைகள் ஏதும் இல்லை. திருமலை ஏழுமலையான் கோயில் உருவாக காரணமாக இருந்த வைணவ குரு ராமானுஜர் அவதரித்த தமிழகத்திலிருந்து பக்தர்கள் வந்து அறைகளுக்காக திண்டாடி வருகின்றனர். எனவே, திருமலைக்கு வரும் தமிழக பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தமிழக அரசு சார்பில் விருந்தினர் மாளிகைகள், ஓய்வறைகள் கட்ட தேவஸ்தானத்திடம் தமிழக அரசு சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் திருமலையில் நடக்கவுள்ள அறங்காவலர் குழு கூட்டத்தின் போது தமிழக அரசிடமிருந்து இதற்கான விண்ணப்பம் பெற்று வந்து கூட்டத்தின் ஒப்புதலுக்கு வைக்க உள்ளதாக சேகர்ரெட்டி தெரிவித்தார்.