சினிமாதமிழகம்

ஊரடங்கை மதிக்காமல் தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் பயணம் செய்து கொரோனாவை பரப்பிய நடிகையின் கணவர்…!

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியது.


இதேபோல் சினிமா தொழிலும் நடைபெறாததால் சினிமாத் தொழிலை நம்பி வாழும் கிட்டத்தட்ட 14 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இவர்களின் வறுமையை போக்கும் வகையில் சினிமாத் துறையில் பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட நல்ல மனம் படைத்தவர்கள் நன்கொடைகள் வழங்கி சினிமாத் தொழிலாளர்களுக்கு உதவினார்கள். இதனால் தொழிலாளர்களின் தற்போதைய கஷ்டங்கள் ஓரளவு குறைந்தது. இருந்தாலும் ஊரடங்கு முழுமையாக முடிவுக்கு வந்து மீண்டும் பணிகள் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் சினிமா தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் சிலருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவியது. பணம் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். தொழிலாளர்கள் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் இயக்குனர் மஜித் கொரோனா தொற்று ஏற்பட்டு வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். அவரது சிகிச்சைக்கான கட்டணம் 4.50 லட்சம், இதில் அவரது மனைவி 2.30 லட்சம் செலுத்தி இருக்கிறார். மீதித் தொகை செலுத்த அவர்களிடம் பணம் இல்லாத நிலையில் நயன்தாராவை வைத்து அறம் படத்தை இயக்கிய கே.ஜே.ராஜேஷ் மற்றும் பெப்சியின் முன்னாள் தலைவர் பெப்சி சிவாவும் சேர்ந்து மீதித் தொகையை விஜயா மருத்துவமனையில் செலுத்தி இயக்குனர் மஜித்தை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த தகவல் சினிமா சம்பந்தமான வாட்ஸ்அப் குழுக்களில் இயக்குனர் மஜித் கொரோனா நோய் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என்ற செய்தி பகிரப்பட்டது. இதனை அறிந்த இன்றைய பெப்சி தலைவரும் இயக்குனர்கள் சங்கத்தின் தலைவருமான செல்வமணி அன்கோவினர் அதாவது ரெங்கநாதன் என்பவர் செல்வமணிக்கும், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நடிகை ரோஜாவிற்கும் நன்றி என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட உடனேயே ஏகப்பட்ட எதிர்பதிவுகளை பதிவிட ஆரம்பித்து விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சினிமாக்காரர்கள் சிலர் செல்வமணிக்கு இந்த சுயவிளம்பரம் தேவையா? திருந்தவே மாட்டாரா? என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசு சினிமாத் தொழிலாளர்களுக்கு போதிய நிதி உதவி வழங்கவில்லை. ஆகையால் மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்று பேட்டி அளித்தார். அதனை அறிந்த இயக்குனரும் அதிமுக தலைமைக் கழக பேச்சாளருமான பி.சி.அன்பழகன், ‘விளம்பர வெறிபிடித்த செல்வமணி தமிழக அரசிடம் பெற்ற பணத்திற்கு வெள்ளை அறிக்கை கொடுக்கத்தயாரா?’ என்று காட்டமாக செல்வமணிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் “சினிமா சம்பந்தப்பட்ட அரசு விழாக்களில் மாப்பிள்ளை அந்தஸ்தோடு கௌரவிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் செல்வமணியோ நன்றி மறந்து விளம்பர வெறிபிடித்து, பாதி நாட்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு அரசுக்கெதிராக அவதூறு பேட்டி கொடுக்கிறார். கொரோனா பிணிக்காலத்திலும் 2,10,679 திரைப்படத்துறை நலவாரிய உறுப்பினர்களின் பசியைப் போக்க 2 கோடியே 26 லட்சம் அவரவர் வங்கிக் கணக்குகளில் தமிழக அரசு செலுத்தியிருக்கிறது.

149 திரைப்படங்களை தயாரித்த நலிந்த தயாரிப்பாளர்களுக்கு தலா 7 லட்சம் வழங்கி வரலாறு படைத்ததை இந்த தகராறு பிடித்த செல்வமணி மறந்தது ஏன்?

முயல் குழி பறிக்க.. பறவை விதைபோடும் என்பதுபோல் பையனூரில் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைக்க 5 கோடி ஒதுக்கீடு செய்து, இரண்டு கட்டங்களாக ஒன்றரைக் கோடியை செல்வமணியின் கையில் கொடுத்த முதல்வரை விமர்சிக்கலாமா? செல்வமணி.

செல்வமணிக்கு ஆந்திர அரசியலின் தந்திரங்கள் புரியுமளவுக்கு, கடந்த பத்து வருடங்களாக தமிழ் சினிமாவின் எதார்த்தம் புரியவில்லை.

50 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு 150 கோடி தயாரிப்பு செலவுகளை இழுத்துவிட்டு தயாரிப்பாளர்கள் தெருக்கோடிக்கு செல்வதை ரசிக்கும் பிரபல ஹீரோக்களின் படங்களுக்கு பணியாற்ற 200 பேர் தேவை என்று கொரோனா பதட்ட காலத்திலும் மூச்சு வாங்கப் பேசுகிறார் செல்வத்தை மட்டுமே ருசிக்கம் செல்வமணி.உயிர் பிழைத்தால் கலைஞர்கள் தனியாக உழைத்து பிழைப்பு நடத்துவார்கள்.

திரைப்படத் துறையினருக்கு பல்வேறு காலகட்டங்களில் பல உதவிகளைச் செய்த தமிழக அரசை விமர்சிக்காமல் அரசிடம் வாங்கிய பணத்திற்கான கணக்கை வெள்ளை அறிக்கை வெளியிட்டு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று செல்வமணியை எச்சரித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கை சினிமாத்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காலத்தில் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டுமானால் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் உரிய காரணங்களை தெரிவித்து சென்னை மாநகராட்சியிடம் இ&பாஸ் வாங்கித்தான் மாவட்டங்களை கடந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல முடிகிறது. ஆனால் செல்வமணியோ தான்விரும்பும் நேரங்களில் எல்லாம் மாநிலம் விட்டு மாநிலமாக சென்று வந்து கொண்டுதான் இருக்கிறார். அவருக்கு தமிழக ஆந்திர அரசுகள் எப்படி இ&பாஸ் வழங்குகிறது.

தனது மனைவி நடிகை ரோஜா ஆந்திரா எம்எல்ஏவாக இருக்கிறார். அதனால் செல்வமணியின் குடும்பம் ஆந்திராவில் தங்கி இருக்கிறார்கள். செல்வமணி சென்னைக்கும் ஆந்திராவிற்கும் தனது மனைவியின் எம்எல்ஏ கார் பாஸ்-ஐ தவறுதலாக பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் பேசப்பட்டு வருகிறது. சாதாரண பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தும் அரசாங்கம் செல்வமணிக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தது ஏன்?

செல்வமணி அடிக்கடி ஆந்திராவிற்கும் தமிழகத்திற்கும் சென்று வருவதால் கொரோனா தொற்று இன்று பெப்சி நிர்வாகிக்கும் பரவி இருக்கிறது.

சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட விழாவில் செல்வமணி கலந்து கொண்டார். அதன்பிறகு தலைமைச் செயலகம் மூடப்பட்டது. முதல்வரின் தனிச்செயலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதற்கெல்லாம் காரணம் செல்வமணி ஊரடங்கை மதிக்காமல் தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும் மாறிமாறி பயணம் செய்வதுதான் காரணமாக இருக்குமோ என்று சினிமாத்துறையினர் பேசிக்கொள்கிறார்கள்.

எதுஎப்படியோ பொறுப்புள்ள பதவியில் இருக்கும் நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணி பொறுப்பில்லாமல் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு பொறுப்பான தலைவராக ஊரடங்கை மதித்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. நாமும் அதையே எதிர்பார்ப்போம்.

  • சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button