கிருமி நாசினி தெளிப்பில் மங்கலம் ஊராட்சியை பாராட்டிய மத்திய சுகாதாரத்துறை
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கோட்டத்திற்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக கிருமி நாசினி தெளித்து சாதனை படைத்துள்ளது. ஊராட்சி பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து கொரோனா தொற்று பரவாமல் தடுத்ததற்காக இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சியாக மங்கலம் ஊராட்சியை தேர்வு செய்து பாராட்டி இருக்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தினசரி அதிகாலை முதல் இரவு வரை சுகாதாரத்துறையினர், துப்புறவு பணியாளர்கள் மூலமாக தினசரி கிருமி நாசினி தெளித்து வந்துள்ளார். அந்தப் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது, முக கவசங்கள் வழங்கி வருகிறார். கொரோனா நோய் தொற்றின் அறியாமையை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் வகையில் முககவசம் அணியாமல் வெளியில் வரக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
இதேபோல் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், இதய நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை, நீரழிவு, நோயாளிகள் தினசரி உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை தன்னார்வ தொண்டர்கள் மூலம் வழங்கி வருகிறார். தனது சொந்த வாகனத்தை இந்த ஊராட்சி மக்களின் அவசர மருத்துவ சேவைக்கு பயன்படுத்தி வருகிறார். இந்த ஊராட்சியில் சில குடும்பங்களில் கொரோனா தொற்று இருந்தும் சமூக பரவலாக பரவாமல் தடுப்பு பணிகளை சிறப்பாக செய்து மங்கலம் ஊராட்சியை கொரோனா நோய் தொற்றில் இருந்து விடுவித்ததால் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
– சௌந்திர ராஜன்