போலி ஆவணங்கள் மூலம் கிறிஸ்துவ அமைப்பின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி..!
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்தின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக, பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ள நிலையில், மோசடிக் கும்பலின் தலைவன் கமலேஷ்வரன் தனது கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டபோது.. கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்திற்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடங்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க, மோசடிக் கும்பலுடன் அரசு அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளதாக வெளியான தகவல் பதிவுத்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது பட்டுக்கோட்டையில் பால் சாண்டகிரன் என்பவர் கடந்த 1957 ஆம் ஆண்டு அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் என்கிற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். பின்னர் 1972 ஆம் ஆண்டு அவர் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து, 1974 ஆம் ஆண்டு வரை சுவன் சாண்டகிரன் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். பின்னர் அவர் தனது சொந்த ஊரான சுவீடன் நாட்டிற்கு சென்று விட்டாராம். அதன்பிறகு தலைவராக இருந்த பாதிரியார் தர்மராஜ் பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு குடிபெயர்ந்து, திருச்சியை தலைமையிடமாக கொண்டு அந்த அமைப்பை நடத்தி வந்துள்ளார். தற்போது பாதிரியார் ஆப்ரகாம் தாஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பிற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளது. மேலும் தேவாலயங்கள், கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.
இதனையறிந்த சிலர் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் அமைப்பின் சொத்துக்களை அபகரிக்க அதிகாரிகள் துணையோடு பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியுள்ளனர். அதாவது கிருஸ்தவ அமைப்பிற்கு சொந்தமான இடத்திற்கு, கோவை வீர கேரளம் பகுதியைச் சேர்ந்த கமலேஷ்வரன் கடந்த 2015 ஆம் ஆண்டு கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் அலுவலகம், ஜெர்மன் நாட்டிலிருந்து தன்னை தலைவராக நியமித்து கடிதம் வந்ததாகக் கூறி, திருச்சி மாவட்ட பதிவுத்துறை பதிவாளரிடம் போலியான கடிதத்தை கொடுத்துள்ளார். பின்னர் கோவை தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் என்கிற பெயரில் டிரஸ்ட் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் அமைப்பிற்குச் சொந்தமான சொத்துக்களுக்கு தான்தான் தலைவர் என அறிவித்து, தமிழகம் முழுவதும் பலகோடிகளை முன் பணமாக வசூலித்துக் கொண்டு, கோவை, தேனி, மதுரை, கொடைக்கானல் பகுதிகளில் கிரயம் செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் போலி ஆவணங்கள், போலியான ரப்பர் ஸ்டாம்ப் போன்றவற்றையும் தயாரித்து அதிகாரிகள் துணையோடு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ள நிலையில், இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட கோவை மாநகர காவல்துறையினர், ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பதிவுத்துறையில் ஏற்கனவே ஒரு சங்கம் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், அதே பெயரில் புதிய சங்கம் பதிவு செய்ய பதிவுத்துறை சட்டத்தில் இடமில்லாத போது, தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் எதன் அடிப்படையில், கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் பெயரில் கமலேஷ்வரன் என்பவருக்கு பதிவு செய்து கொடுத்தார்? பணத்தைப் பெற்றுக்கொண்டு பதிவு செய்து கொடுத்தாரா? என்பதை விசாரணை செய்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அப்பகுதியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் போலி அறக்கட்டளையின் தலைவர் கமலேஷ்வரன் மீது இதுவரை கொடைக்கானல், கோவை உள்ளிட்ட ஐந்து காவல் நிலையங்களில் மோசடி புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலமோசடியின் பின்னணியில், கமலேஷ்வரனுக்கு உடந்தையாக வின்சென்ட் வினோத் குமார், ஆஷிக் ராஜா ஆகியோர் மூளையாக செயல்பட்டதாகவும், கோவை போத்தனூரில் உள்ள இடத்திற்கு போலியான பட்டா வாங்க உதவியாகவும், போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தை சார் பதிவுவாளர் அலுவலகத்தில், கோவையில் உள்ள சொத்திற்கு பதிவு செய்த புகாரில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் காவல்துறையினர் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசனுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில், தென்மாவட்டங்களில் இருந்து கும்பல் கும்பலாக, பிரச்சனைகளை முடித்து தருவதாக கூறி, தற்போதைய தலைவர் ஆபிரகாமை வளைத்தும், மிரட்டியும் வருகிறார்களாம். இது தவிர கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசனுக்குச் சொந்தமான ஏராளமான சொத்து பாத்திரங்களையும் ஆபிரகாமுக்கு தெரியாமல் திருடிச் சென்றுள்ளார்களாம். நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட சங்கத்தின் சொத்துக்களை திருட்டு கும்பல் பல ரூபத்தில் முயற்சி செய்து வருவது பதிவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும், மோசடி கும்பலிடம் பெறவேண்டியதை பெற்றுக்கொண்டு பதிவு செய்தும், பட்டா வழங்கியும் இருக்கிறார்கள்.
பதிவுத்துறை, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், மோசடி கும்பலுக்கு துணைபோன அதிகாரிகள் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, பணிநீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் பெயரில், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை அந்த சங்கத்தினரின் ஒப்புதலுடன், உண்மையான தலைவர் சம்மதத்துடன் மட்டுமே பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அதோடு பல இடங்களில் கமலேஷ்வரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையருக்கு கோரிக்கையும் வலுத்து வருகிறது.