தமிழ் திரையுலகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்தாலும் அதில் சில நூறுபேர்கள் மட்டுமே வசதியிலும் வாழ்க்கையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழே பரிதாப நிலையில் தான் இருக்கிறார்கள். இந்த வைரஸ் பாதிப்பு வந்து அவர்கள் நிலையை இன்னும் மோசமாக்கி விட்டது.
இந்த தொழிலாளர்களில் பெருமபாலோருக்கு வீட்டு வாடகை என்பது பெரும் சவாலாக இருக்கிறது. இதை உணர்ந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பையனூர் அருகே பல ஏக்கர் அரசு நிலத்தை வழங்கினார்.
அந்த இடத்தில் படப்பிடிப்பு தளங்கள், தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளிகள் என அனைத்தும் ஏற்படுத்தி கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த சூழலில் அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கலைஞர் வழங்கிய இடம் எந்த பயன்பாட்டிலும் இல்லாமல் அப்படியே கிடந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது மீண்டும் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, படப்பிடிப்பு தளம் அமைப்பது என்ற கோரிக்கையோடு பெப்சி தலைவர் செல்வமணி அடிக்கடி போய் பேச எடப்பாடி அரசும் தேர்தலை மனதில் வைத்து பல கோடிகளை வழங்கியது. அப்படி வழங்கப்பட்ட சுமார் 7 கோடிக்கும் அதிகமான பணத்தில் பொட்டல் காடாக பராமரிப்பு இன்றி முள் காடாக காட்சியளித்த அந்த இடத்தில் சுத்தம் செய்வதாக கூறி பல கோடிகளும், மண் கொட்டி சமப்படுத்துவதாக கூறி பல கோடிகளும் செலவானதாக கணக்கு காட்டப்பட்டதாம்.
அதோடு, ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்படாமல் இருந்த பழைய கட்டிடத்தை சுண்ணாம்பு அடித்து புதிய கட்டடம் போல சினிமா செட் அமைத்து அதற்கு ஜெயலலிதா அரங்கம் என்றெல்லாம் பெயர் வைத்து அதை தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிச்சாமியை வைத்து திறந்தார் செல்வமணி. இந்த விழாவோடு அந்த பகுதிக்கு யாரும் போகவில்லை.
அதன்பின் நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த திமுக அரசுக்கு பெப்சி தலைவர் செல்வமணியின் அத்தனை தகிடு தத்தங்களும் தெரியும் என்பதால் தனது வசூல் வேட்டையை மீண்டும் சினிமா பிரபலங்கள் பக்கமாக திருப்பினார் செல்வமணி.
ஒவ்வொரு முறை செல்வமணி தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் அதற்காக இந்த முயற்சி என சொல்லும் போதெல்லாம் ஒவ்வொரு தொழிலாளரும் இந்த முறை கண்டிப்பாக நமக்கு வீடு கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார்கள். இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் பிரமாண்டமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் செல்வமணி. சென்னை பிரசாத் லேபில் நடை பெற்ற அந்த விழாவுக்கான வரவேற்பு விளம்பரத்தில் பல அடுக்கு சொகுசு குடியிருப்பு மிக பிரமாண்டமாக காட்சியளித்தது. அதில் ஒரு பக்கம் விஜயசேதுபதி டவர் என்றும், இன்னொரு பக்கம் விஜய்சேதுபதி உருவமும் இருந்தது.
இதைப்பார்த்த தொழிலாளர்களில் பலர் இப்படித்தான் பெப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வரப்போகிறது போல என நினைத்து அங்கே பேசிக் கொண்டிருந்ததுதான் வேதனையின் உச்சம்.
அந்த விளம்பரத்தில் இருந்த பிரமாண்ட கட்டிடம் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருப்பவர் விஜயசேதுபதி.
அந்த நிறுவனத்தில் கிடைத்திருந்த சம்பள் பணத்தில் 1 கோடியை தொழிலாளர்களுக்கு வீடு கட்ட விஜய்சேதுபதி நன்கொடை கொடுக்கும் நிகழ்ச்சிதான் அது.
செல்வமணியின் தகிடு தத்தங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல் தொழிலாளர்களின் மீதுள்ள அன்பால் நடிகர் விஜய்சேதுபதி கொடுத்த தொகைக்கு எப்படி கணக்கு காட்டுமோ செல்வமணி & டீம் அந்த நிறுவன கட்டிட படத்தை போட்டு மக்களையும் ஏமாற்றி, நம்பிய தொழிலாளர்களையும் ஏமாற்றிய பெப்சி தலைவர் செல்வமணியின் வசூல் வேட்டைக்கு எப்போது முடிவு வரும்?
- கோடங்கி