காவல்துறை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு…!சிபிஐ விசாரணை தேவை…!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்
செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர் கடந்த 20ஆம் தேதி காவல்துறையினால் கைது செய்யப்பட்டு, 21-ஆம் தேதி கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
வியாபாரிகள் ஜெயராஜ், பென்னீக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியதால் அதில் ஏற்பட்ட காயத்தின் விளைவாகவே இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தந்தை, மகன் இருவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
சாத்தான்குளத்தில் உள்ள கிளைச் சிறையில் இவர்களை அடைக்காமல் அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி சிறைக்கு கொண்டு சென்றது ஏன் ?
மகன் இறந்ததை தந்தைக்கு தெரிவிக்காமலே அவரது உயிர் பிரியும் அளவிற்கு தாக்கி மகனின் இறப்பிற்கு காவல் நிலையத்தில் காவலர்கள் மகனின் ஆசன வாய் பகுதியில் லத்தியை விட்டு தாக்கியது தான் காரணம் என்று கண்ணால் பார்த்த காட்சிகளுக்கு சாட்சியாக மாறிவிடுவார் என்பதால் தான் அவரையும் முடித்து விட்டார்கள்.
மேலும் இது போன்ற பல்வேறு சந்தேகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதில் என்ன வேடிக்கை என்றால் இதுவரை காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை கால் முறிந்து மாவு கட்டு போடப்பட்டது என்று கூறிய காவல்துறையினர் இந்த வழக்கு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தரையில் படுத்து உருண்டதால் ஊமைக்காயங்கள் ஏற்பட்டது என்று கூறியிருப்பது தான் வேடிக்கை.
தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட பத்து காவலர்கள் , மூன்று ஊர்க்காவல் படையினரின் இந்த மனிதநேயமற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவல்துறையினரின் தாக்குதலில் இரு வியாபாரிகள் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தவறு செய்த காவலர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதுமானதல்ல , நிரந்தரப் பணி நீக்கம் செய்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறுமா காத்திருப்போம்.