நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் மூலம் ஐந்து மாவட்டங்கள் குடிநீர் வசதியும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு லட்சத்தி இருப்பத்தி ஐந்தாயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெருகின்றன.
தாமிரபரணி நதியின் முதல் அணைக்கட்டாக கோடை மேழலகியான் அணைக்கட்டு உள்ளது. அதிலிருந்து வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் மூலம் பாபநாசம், விக்கிரம சிங்கபுரம், சிவந்திபுரம், கோடாரன்குளம், வாகை குளம், மன்னார் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் கடைமடைப் பகுதிகளான வாகைக்குளம், மன்னார் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள சீர்பாதகுளம், ஞானபட்டர் குளம், புதுக்குளம் ஆகிய குளங்களின் மூலம் எழுநூறுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த நான்கு மாதத்திற்கு முன் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை நம்பி அப்பகுதி விவசாயிகள் சாகுபடிப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். ஆனால் கடைமடைப் பகுதியான வாகைகுளம், மன்னார்கோவில் பகுதிகளில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு கால்வாயில் போதிய அளவு நீர் வரவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரடியாக பார்வையிட்டு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் கழிவுப் பொருட்களை கொட்டுவது, ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது, வீடுகள், செங்கல் சூளை போன்றவற்றுக்கு முறைகேடாக மோட்டார் மூலம் தண்ணீரை எடுப்பது போன்ற காரணங்களால் தண்ணீர் வேகம் குறைந்து நீர்வரத்து குறைந்துவருகிறது. இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் உள்ள அடைப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி ஒரு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறையின் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதத்திற்கு முன் ஒரு கோடி ரூபாய் செலவில் கால்வாய் சீரமைக்கப்பட்டிருந்தால் கடைமடை வரை தண்ணீர் வராதது ஏன்? பயிர்கள் கருகியது ஏன்? என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் சீரமைப்புப் பணிகள் நடந்ததற்கான அறிவிப்பு பலகையைத் தவிர வேறு எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதன்மூலம் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. நீர் திறப்பை நம்பி பயிரிட்ட விவசாயிகள் நீரின்றி பயிர்கள் கருகி வருவதை காணமுடியாமல் வேதனையில் மூழ்கியிருக்கின்றனர். கருகிய பயிர்களுக்கு ஈடாக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் குப்பைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீர் திருடப்படுவதை தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காபபாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
விவசாயத்தைப் பெருக்க பொதுப்பணித்துறையின் பங்கு பெரும் பங்கு என்பதை உணர்ந்து, அறிவிப்பு பலகை மட்டுமே வைக்காமல் நீர்வழிப் பாதைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நடவடிக்கை எடுப்பார்களா? அரசு அதிகாரிகள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-ரமாநந்தன்