சாலைகளில் கழிவு நீர்… டெங்கு பயத்தில் பொதுமக்கள்..!
கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால் காஞ்சிபுரத்தில் உள்ள திருக்காலிமேடு என்எஸ்கே நகர் பகுதியில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டுதான் நடமாடுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறுகின்றனர்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு என்எஸ்கே நகர் பகுதி பொதுமக்கள் நம்மிடம் கூறுகையில் இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காஞ்சிபுரம் நகர் முழுவதிலும் உள்ள கழிவு நீரை தினசரி 25 முதல் முப்பது கழிவுநீர் டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து எங்கள் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் வெளியேற்றுகின்றனர். வார விடுமுறை நாட்களில் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அதிகாலை மூன்று மணியிலிருந்தே கழிவு நீர் கால்வாயில் வந்து வெளியேற்றுகிறார்கள். இந்த கழிவு நீர் டேங்கர் லாரிகள் இந்தப் பகுதி முழுவதும் சாலைகளில் வரும்போது கழிவு நீர் கசிந்து வழிவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த கழிவுநீர் துர்நாற்றத்தால் பொதுமக்கள் வெளியில் வரும்போது முகத்தை மூடிக்கொண்டுதான் வெளியில் நடமாடுகிறார்கள்.
இந்தப் பகுதிகளில் கழிவு நீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகமான அளவில் உற்பத்தியாகின்றன. இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள் பயத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.
அடுத்த சிலமாதங்களில் மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் இதேநிலை நீடித்தால் இப்பகுதியில் டெங்கு மலேரியா நோயால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். தினசரி இந்த பகுதியில் கழிவு நீர் டேங்கர் லாரிகள் மூலம் கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலும் இதேநிலை நீடித்தால் பொதுமக்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டம் நடத்தி தாங்களே இந்த பகுதிகளில் கழிவு நீர் வெளியேற்றும் டேங்கர் லாரிகளை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த இருப்பதாக கூறுகிறார்கள்.
ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் இந்தப் பகுதி முழுவதும் கழிவுநீரை டேங்கர் லாரிகளில் வெளியேற்றுவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்த் தொற்று ஏற்பட்டால் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் உயிரிழப்புகள் தான் அதிகமாக இருக்கும். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசு அதிகாரிகளுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து இந்தப் பகுதியில் கழிவு நீர் டேங்கர் லாரிகளை கழிவு நீர் வெளியேற்ற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.
நோய்த் தொற்று அச்சத்துடன் நடமாடும் மக்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் கனிவுடன் கையாண்டு நிறைவேற்றித் தரவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
– வரதராஜன்