அமைச்சர் காமராஜுக்கு கே.என்.நேரு சவால்
முதலமைச்சரை பாராட்ட மனம் இல்லாமல், குறைகூறுவதையே தலையாய பணியாக நினைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
டெல்டா பகுதி தூர்வாரும் பணிகள் குறித்து மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பி, குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்.காமராஜ் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், டெல்டா பகுதிகளிலுள்ள ஆறுகள், கால்வாய்கள்மற்றும் வடிகால்களை தூர்வார சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 392 பணிகளை சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள அனுமதி வழங்கி, போர்க்கால அடிப்படையில் முடிக்க உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறினார்.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மாவட்ட செயலாளர்கள் தியாகராஜன், மகேஷ் பொய்யாமொழி, வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து, கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பின்னர் கே.என்.நேரு பேட்டியளிக்கையில் கூறுகையில், ”கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கொடுத்த 22,500 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம். அரசின் உதவி கிடைக்காததால்தான் உதவி கேட்டு மக்கள் எங்களிடம் மனு அளித்து வருகிறார்கள்” என்றார்.
தமிழக தலைமைச் செயலாளரிடம் தி.மு.க எம்.பி க்கள் அளித்த மனுக்கள் அனைத்தும் போலி என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “எங்கள் எம்.பிக்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தும் உண்மையான மனுக்கள் என ஆதாரப்பூர்வமாக நிருபிக்க தயாராக உள்ளோம். எப்போது நிரூபிக்க வேண்டும், என்கிற தேதி, நேரத்தை அவர்களே குறிக்கட்டும். அப்போது திமுக நிருபிக்க தயாராக உள்ளது” என்றார்.
கொரோனா தடுப்பு விவகாரத்தில் ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது. இதில், உண்மையை மறைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
- நமது நிருபர்