மோடி அறிவிப்பு எனக்குத் தெரியாது; பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுங்க : பரிதவிக்கும் மூதாட்டி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்தர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சண்முகசுந்தரம் அலுவல் ரீதியாக வெளியில் சென்றிருந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற 70 வயது மூதாட்டி கையில் மஞ்சள் நிற பையுடன் தள்ளாடியபடி வந்தார். பையில், பண மதிப்பிழப்புக்குப் பிறகு, செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.
மூதாட்டியிடம் விசாரித்தபோது, “நான், கணவரால் கைவிடப்பட்டேன். எனக்கென்று யாருமில்லை. வாடகை வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று சிறுக சிறுக ரூ.12,000 பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். பணம் செல்லாது என மோடி அறிவித்தது பற்றி எனக்குத் தெரியாது. அதுமட்டுமன்றி, காசநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். இப்போதெல்லாம் வேலைக்குச் செல்ல முடியவில்லை.
சேர்த்து வைத்த பணத்தை வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவுக்கு பயன்படுத்த முயன்றேன். யாருமே வாங்கவில்லை. நான், கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம். அதை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகளாகத் தர வேண்டும்’’ என்று பரிதாபமாகக் கூறினார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்தித்து கண்ணீர்விட்டு அழுதார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்து விசாரித்தார்.`ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, பழைய ரூபாய் நோட்டுகளை இனி எக்காரணம் கொண்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தர இயலாது’ என்று முன்னோடி வங்கி மேலாளர் தெரிவித்தார். இதனால், பழைய ரூபாய் நோட்டுகளுடன் அந்த மூதாட்டி பரிதவித்துவருகிறார்.