தமிழகம்

ஆசிரியர்களின் கொடுமையால் பறிபோன மாணவர்கள் உயிர்..!

உசிலம்பட்டியில், தன்னிடம் டியூசன் படிக்க வராததால் ஆத்திரம் அடைந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த டார்ச்சரால், 10 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த சிங்கம்- அமுதா தம்பதியினரின் மகன் பாலாஜி. உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

கணித ஆசிரியர் ரவி, தனியாக டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மாணவன் பாலாஜி கடந்த வருடம் 9ம் வகுப்பு படித்த போது ரவியின் டியூசன் சென்டரில் படித்துள்ளார். பின்னர் 10ம் வகுப்புக்கு வந்தவுடன் அவருடைய டியூசன் சென்டருக்கு செல்லாமல், வேறொரு டியூசன் சென்டருக்கு சென்று படித்துள்ளார்.


இதனால் மாணவன் பாலாஜி மீது ஆசிரியர் ரவி கடும் கோபத்தில் இருந்ததாகவும், மாணவனை அடிக்கடி ஏதேனும் காரணத்தைக் கூறி அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வீட்டில் தெரிவித்தபோது, அவரை சமாதானப்படுத்தி பெற்றோர் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களாகவே பள்ளியில் இப்பிரச்சனை தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மாணவன் பாலாஜி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளான். கணித பாடவேளையில் ஆசிரியர் ரவி வகுப்பறைக்கு வந்ததும் பாலாஜியை கோபத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் கடுமையாகப் பேசியதால் மனமுடைந்த பாலாஜி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று யாரிடமும் பேசாமல் இருந்தாக கூறப்படுகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் தோட்டத்திற்கு சென்ற நிலையில், தனியாக இருந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாலாஜியின் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் பாலாஜி எழுதிவைத்த கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்


அந்த கடிதத்தில், “தன்னுடைய சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணமென்றும் அவன் கொடுமை தாங்காமல் இம்முடிவை எடுத்ததாகவும், அவனுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டுமென்றும், அனைவருக்கும் இறுதி வணக்கம்“ எனவும் மாணவன் பாலாஜி எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்
இச்சம்பவம் குறித்து பள்ளியைத் தொடர்பு கொண்ட போது பள்ளி நிர்வாகம் சார்பில் பேச மறுத்து விட்டனர். அதே நேரத்தில் டியூசன் ஆசிரியர் ரவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மாணவர்களுக்கு படிப்பை நல்ல முறையில் கற்றுக் கொடுத்து எதிர்காலத்தை வளமாக்க வேண்டிய ஆசிரியரே, மாணவனின் வாழ்க்கையை முடித்து வைத்திருப்பது வேதனைக்குரியது.
இதேபோல் தூத்துக்குடி விவிடி மேல்நிலைப் பள்ளியில் 150 தோப்புக்கரணம் போடவைத்து தண்டனை கொடுத்த ஆசிரியரின் கொடுமை தாங்காமல் 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.


தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகே விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மரிய ஐஸ்வர்யா, இவர் சில தினங்களுக்கு முன்பு உறவினர் இறந்ததால் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களாகவே வகுப்பு ஆசிரியர் ஞானபிரகாசம் என்பவர் மாணவி ஐஸ்வர்யாவை குறிவைத்து கடுமையாக கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்ற நிலையில், மாணவி ஐஸ்வர்யா பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆசிரியர் ஞானபிரகாசத்தின் டார்ச்சரால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது மாணவிகள் அளித்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

மாணவியின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், முன்கூட்டியே சொல்லாமல் ஐஸ்வர்யா விடுப்பு எடுத்ததற்கு தண்டனையாக 150 தோப்புக் கரணம் போட வேண்டும் என்று ஐஸ்வர்யாவை நிர்பந்தித்துள்ளார் ஆசிரியர் ஞானபிரகாசம். அன்று அவரது வகுப்பு நேரம் முடியும் வரை தோப்பு கரணம் போட்ட ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை கூட ஆசிரியர் கண்டுகொள்ளாமல் எழுந்து சென்ற நிலையில், உடன் படிக்கின்ற மாணவிகள்தான் ஐஸ்வர்யாவின் மயக்கத்தை தெளியவைத்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து பருவத்தேர்வில் வகுப்பில் 2-வது மாணவியாக மதிப்பெண் பெற்ற ஐஸ்வர்யாவை தேர்வில் காப்பி அடித்ததாக குற்றஞ்சாட்டி வெயிலில் நிற்க வைத்து தண்டனை வழங்கி உள்ளார்.

அத்தோடு இல்லாமல் ஐஸ்வர்யாவை பார்த்தாலே அடாவடி சைக்கோ போல ஆசிரியர் ஞானபிரகாசம் நடந்து கொண்டுள்ளார். இதனால் சனிக்கிழமை அவர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் தனக்கு நேர்ந்த கொடுமைகளால் மனம் உடைந்து மாணவி ஐஸ்வர்யா உயிரை மாய்த்துக் கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது.


இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியர் ஞானபிரகாசத்தை காப்பாற்றுவதற்காக, அவரை பள்ளியில் இருந்து தப்பிக்க வைத்த தலைமை ஆசிரியை கனகரத்தினமணி, ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்று போலீசாரிடம் நாடகமாடினார்.

மாணவிகள், ஆசிரியர் ஞான பிரகாசத்தை பார்த்ததாக சொல்ல, வருகை பதிவேட்டிலும் ஆசிரியரின் கையெழுத்து இருந்ததால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து ஆசிரியரை ஒப்படைக்காமல் தலைமை ஆசிரியை மறைக்க முயற்சிப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த ஆசிரியர் ஞானபிரகாசத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் தலைமை ஆசிரியை கனகரத்தினமணியை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவான ஆசிரியர் ஞானபிரகாசத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஆசிரியர் ஞானபிரகாசத்தின் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவ- மாணவிகளுக்கு அன்பையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் சித்ரவதைக் கூடங்களாக மாறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவங்களே உதாரணம்..!

  • பாஸ்கர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button