25 ஆண்டுகளில் தனி நபரால் உருவான 100 ஏக்கர் வனம்..!
25 ஆண்டுகளில் 100 ஏக்கர் பரப்பளவில் தனி ஒரு நபராக உருவாக்கிய வனப்பகுதியானது, மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழகம்-புதுச்சேரி எல்லையில் சர்வதேச நகரான அரோவில் அருகில் உள்ளது ஆரண்யா எனும் இந்த வனப்பகுதி. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டாந்தரையாகவும், மரங்கள் இல்லாமலும் பூத்துறை கிராமத்தில் இருந்த 100 ஏக்கர் நிலத்தை 1989 ஆம் ஆண்டு ஆரோவில் நகரில் தன்னை இணைத்துகொண்ட சரவணன் என்பவர் வனமாக மாற்றி இருக்கிறார்.
முதலில் நிலத்தில், வரப்புகள் அமைத்து மழைநீர் பூமிக்கடியில் செல்லும்படி செய்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, மண் வளம் அடையச்செய்துள்ளார். பிறகு உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டார். அவரது 25 ஆண்டு கால கடின உழைப்பால் தற்போது மரம், செடி, கொடிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்ந்து, பச்சை போர்வை போர்த்தியது போல பரந்து விரிந்து காட்சியளிக்கிறது ஆரண்யா வனம்.
இங்கு செம்மரம், தேக்கு, மா, பலா, கருங்காலி, வேங்கை உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட மர வகைகளும், மாங்குயில், மயில், பச்சப்புறா, கொண்டாலத்தி, அமட்டகத்தி உள்ளிட்ட 240 பறவை வகைகளும் உள்ளன. அதுமட்டுமல்லாமல் மான், முல்லம்பன்றி, காட்டுப்பன்றி, தேவாங்கு, உடும்பு, எறும்புதிண்ணி, நட்சத்திர ஆமை உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட வன விலங்குகள் மற்றும் பாம்பு இனங்களும் இங்கு வசித்து வருகின்றன.
இந்த வனத்தில் ஆராய்ச்சி செய்ய, பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தாவரவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள், நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இப்பகுதி மக்கள் தூய்மையான காற்றை சுவாசிப்பதுடன், நிலத்தடி நீர் மட்டமும் பாதுகாக்கப்படுகிறது.
இவரது பணியை பாரட்டி, விழுப்புரம் மாவட்ட கௌரவ வன உயிரியல் பாதுகாவலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இவரைப் போன்று ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றாவது நட்டு பராமரித்தால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், தண்ணீர் பஞ்சமும் ஏற்படாது.
–நமது நிருபர்