முகநூல் காதல் விபரீதங்கள்..!
காதலில் விழுந்த பெண் போலீசிடம் இருந்து 7 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, திருப்பிக் கொடுக்க மறுத்து ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக பிளாக் மெயில் செய்யும் முகநூல் செய்தியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் தங்கராணி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த சிவ பிரேம்குமார் என்பவரை காதலித்துள்ளார்.
மளிகைகடை வைத்துக் கொண்டு தன்னை முகநூல் செய்தியாளர் என்று சுற்றிவந்த சிவ பிரேம்குமாருடன் தங்கராணி சுமார் 4 வருடம் பழகிய நிலையில் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. அவருடன் நெருக்கமாக இருந்த நேரத்தில் வங்கியில் தன் பெயரில் 7 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தங்கராணியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட முகநூல் செய்தியாளர் சிவ பிரேம்குமார் அவரது 7 லட்சம் ரூபாயை திருப்பிகொடுக்க முடியாது என்றும் பணத்தை கேட்டு தொல்லை செய்தால் இருவரும் தனிமையில் ஒன்றாக இருந்த போது எடுத்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பிளாக் மெயில் செய்து மிரட்டி வருவதாக ராதாபுரம் காவல் நிலையத்தில் தங்கராணி புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான சிவபிரேம் குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதற்கிடையே தங்கராணியின் உறவினரிடம் பேசிய சிவ பிரேம்குமார், தான் தங்கராணியை திருமணம் செய்யவில்லை என்றும் பல ஊர்களுக்கும் அழைத்துச்சென்றதாகவும் ஒப்புக் கொண்டார்.
தங்கராணி, தன்னை காதலித்து சுற்றி வந்ததால் தான் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக ஒப்புக்கொண்ட சிவ பிரேம்குமார் தனக்கு தெரியாத போலீஸ் அதிகாரிகளே இல்லை என்பது போல பேசியுள்ளார்.
மேலும், தன் மீது பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு பெண்ணை மிரட்டிய வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் இந்த வழக்கு எல்லாம் தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என்றும் சவால் விட்டுள்ளார்.
அரியாத வயதில் வயது கோளாறால் காதலில் விழுந்து சிக்கித்தவிக்கும் சில பெண்கள் மத்தியில் பொறுப்பான போலீஸ் வேலையில் இருந்து கொண்டு காதலில் விழுந்து, கட்டுப்பாடின்றி சுற்றித்திரிந்ததால், பிளாக் மெயிலரிடம் சிக்கி சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் பெண் போலீஸுக்கு எதிராகவே இவ்வளவு கடுமையான வார்த்தைகளால் மிரட்டும் பிளாக்மெயிலர் சிவ பிரேம் குமார் கையில் சாமானிய பெண்கள் சிக்காமல் தடுக்க அவர் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சிங்கப்பூர் மாப்பிள்ளை வீட்டில் காதலி சடலத்துடன் போராட்டம்..!
முகநூலில் அறிமுகமாகி, 5 வருடம் காதலித்து ஊர் சுற்றிய இளம் பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த சிங்கப்பூர் மாப்பிள்ளை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, ஐந்துவருடம் அவருடன் ஊர் சுற்றி விட்டு… அவளை விட அழகான பெண் கிடைத்ததும் கம்பி நீட்டி சிக்கிக் கொண்டார் தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு பகுதியை சேர்ந்த புகழரசன் என்பவர்.
சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்த அருணாவை முக நூலில் சந்தித்து காதல் வலையில் சிக்கவைத்த புகழரசன், அவருக்கு திருமண ஆசை காட்டி 5 வருடங்கள் பல இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார். இடையில் புகழரசன் சிங்கப்பூரில் வேலை கிடைத்து அங்கு சென்றுள்ளான்.
புகழரசனின் பெற்றோர் பட்டுக்கோட்டையை சேர்ந்த வேறொரு பெண்ணை அதிக வரதட்சனையுடன் மணம் முடிக்க புகழரசனுக்கு நிச்சயதார்தம் செய்துள்ளனர். இதனை அறிந்து அருணா, புகழரசன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்த புகழரசன், காதலி அருணாவிடம் செல்போனில் பேசி, உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்து நம்ப வைத்துள்ளான். ஆனால் ஒரே நேரத்தில் தனது காதலி அருணாவுடனும், நிச்சயம் செய்யப்பட்ட சாந்தியுடனும் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளான்.
ஊர் திரும்பியதும் திருமணம் செய்து கொள்வதாக காதலிக்கு அளித்த வாக்குறுதியை மீறிய புகழரசன் தனக்கு வசதியான இடத்தில் இருந்து அழகான பெண் கிடைத்துள்ளது என்று அருணாவை கழற்றிவிட்டுள்ளான்.
அதோடில்லாமல் 27 ந்தேதி அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து உறவினர்கள் புடை சூழ ஏற்கனவே நிச்சயம் செய்த சாந்தியை முறைப்படி திருமணம் செய்த புகழரசன், தனது திருமண போட்டோவை சூட்டோடு சூடாக காதலிக்கு அனுப்பிவைத்து இனி தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல சவால் விட்டுள்ளார். இதையடுத்து தன்னை காதலித்து ஏமாற்றிய புகழரசன் தான் சாவுக்கு காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு அருணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அருணாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருணாவின் சடலத்தை எடுத்துச்சென்று சிங்கப்பூர் மாப்பிள்ளை புகழரசன் புதிதாக கட்டிவரும் வீட்டிற்குள் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் சிக்கிய புது மாப்பிள்ளை புகழரசனை அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து பழைய வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி ஒழிந்து கொண்ட புகழரசன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளான். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருணாவின் உறவினர்களிடம் பேசி சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.
தங்கள் வீட்டு பிள்ளையின் சாவுக்கு காரணமாக புகழரசனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதால், அருணாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்த காவல்துறையினர் புது மாப்பிள்ளை புகழரசனை கைது செய்தனர்.
திருமணம் முடிந்த கையோடு, வாட்சாப்பில் திருமண போட்டோவை, ஏமாற்றப்பட்ட காதலிக்கு அனுப்பி வெறுப்பேற்றிய பொறுப்பற்ற சிங்கப்பூர் மாப்பிள்ளையை போலீசார் சிறப்பான விருந்து கொடுக்க ஜெயிலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்..!
ஒருவர் காதலித்து ஏமாற்றினார் என்றால் உயிரை விட வேண்டியது இல்லை, முறைப்படி தக்க ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்து காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தவும் ஏமாற்றிய இளைஞர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் இயலும் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
- நமது நிருபர்