ஓட்டுக்கு காசு வாங்காதீங்க : நந்தினியின் விழிப்புணர்வு பிரச்சாரம் !
உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, தான் மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் வாயிலாக இளம்பெண் நந்தினி ஆனந்தன், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அசிங்கம், தமிழகத்தில் தேர்தலுக்கு தேர்தல் அரங்கேறி வருகிறது. தேர்தலா… எவ்வளோ காசு தருவீங்க, என்னப்பா…எங்களையெல்லாம் கவனிக்க மாட்டீர்களா இப்படி வாக்காளர்கள் வெளிப்படையாக கேட்கும் அளவுக்கு, அரசியல் கட்சிகள் பொதுமக்களை பழக்கி வைத்துள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் யாரும் ஓட்டுக்கு காசு வாங்க வேண்டாம் என்றும், அவ்வாறு பொதுமக்கள் வாக்களிக்க கைநீட்டி காசு வாங்கினால், அவர்கள் அரசியல்வாதிகளுக்கு என்றைக்கும் அடிமைகளாக தான் இருக்க வேண்டும் எனக் கூறி, இளம்பெண் நந்தினி ஆனந்தன் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் தமது பிரசாரத்தை தொடங்கியுள்ள அவர், ஓட்டுக்கு பணம் வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்து வருகிறார். அத்துடன், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நந்தினி ஆனந்தனின் துண்டு பிரசுரத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
தேர்தலின் போது அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. அதை மக்கள் கேள்வி கேட்டால் “காசு வாங்கிக்கொண்டு தானே ஓட்டு போடுகிறீர்கள், எங்களைக் கேள்வி கேட்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?” என ஆட்சியாளர்கள் அலட்சியமாக பேசுகிறார்கள். மக்களின் எந்த நியாயமான போராட்டங்களுக்கும் ஆட்சியில் இருப்போர் செவி சாய்ப்பதில்லை.
ஊழல் அரசியல்வாதிகளிடம் கை நீட்டி மக்கள் ஓட்டுக்கு காசு வாங்குவதால் அவர்கள் மக்களை கிள்ளுக் கீரைகளாக ஏளனமாக நினைக்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில் இவர்கள் கொடுக்கும் சொற்ப பணத்தை வாங்குவதால் மக்களின் வாழ்க்கை முன்னேறி விடப்போகிறதா?
இவ்வாறு ஊழல் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்குவதன் மூலம் நம் வாழ்க்கையையும் நாசமாக்கி, நம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கையையும் நாசமாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலைக்கு உடனே முடிவு கட்ட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் என்ற உறுதியான முடிவை தமிழக மக்கள் அனைவரும் எடுக்க வேண்டும். ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் “ஓட்டுக்கு பணம் வேண்டாம்! டாஸ்மாக்கை மூடுங்கள்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்! அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்! என மக்கள் ஒரே குரலில் கேட்க வேண்டும்.
‘மக்களுக்கு பிச்சை போடுவது போல’ பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கேவலமான அரசியல் நடைமுறைக்கு முடிவுகட்ட சபதம் ஏற்போம். மக்களிடம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்துகிறோம்.
இப்பிரச்சாரத்துக்கு அனைவரும் முழு ஆதரவு தருமாறும், தங்கள் பகுதிகளில் இந்த விழிப்புணர்வை உருவாக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என நந்தினி ஆனந்தன் அதிரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருவதன் மூலம், நந்தினி ஆனந்தன் சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
& நீதிராஜ பாண்டியன்