பரமக்குடியில் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மேஸ்திரி : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் செந்தாமரை என்ற பெண்ணிற்கு நகராட்சியில் மேஸ்திரியாக வேலைபார்க்கும் கனகு சபேஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று நமது குழுவினரிடம் கண்ணீர் மல்க கதறி அழுத சம்பவம் மிகவம் பரிதாபத்திற்குரியது.
இதுகுறித்து துப்புறவு பணியாளரான செந்தாமரை நம்மிடம் கூறுகையில்.. எனது கணவர் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள நிலையில் எனது கணவரும் இறந்துவிட்டதால் விதவை அடிப்படையில் பரமக்குடி நகராட்சியில் துப்புறவு பணியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். கடந்த 14 வருடங்களாக எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாமல் பணி புரிந்து வருகிறேன். எனக்கென்று சொத்துக்களோ, உறவினர்கள் உதவிகளோ எதுவும் கிடையாது.
இந்நிலையில் நகராட்சியில் 2வது பிரிவில் இருந்து நான் வேலை பார்க்கும் 3வது பிரிவிற்கு பணிமாறுதலாகி வந்துள்ள மேஸ்திரி கனக சபேஸ் என்பவர் என்னிடம் காமப்பேச்சு பேசுவதும், அவரது காம இச்சைகளுக்கு வற்புறுத்துவதும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடச் செல்லும்போது என்னை மட்டும் தனியாக வரச்சொல்லி என் கையை பிடிப்பது, நான் தடுத்தால் உன்னை தூக்கிக் கொண்டு போய் கற்பழித்தால் யாரு கேட்பார்கள், உனக்குத்தான் புருஷன் இல்லையே நான் உனக்கு புருஷனாகவும், நான் இருக்கும் வரை உனக்கு வேலை எதுவும் கொடுக்காமல் உனக்கு பாதுகாப்பாக இருக்கிறேன். அதற்கு நீ எனக்கு ஒத்துப்போ என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதை வெளியில் சொன்னால் கூலிப்படையை வைத்து கொன்று வாகன விபத்தில் இறந்ததாக காட்டி விடுவேன் என்று தொடர்ந்து எனக்கு இம்சை கொடுப்பதையே முழுநேர வேலையாக செய்துவருகிறார்.
சமீப காலமாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தினசரி பிளீச்சிங் பவுடர் தெளிப்பது வாடிக்கையான வேலை என்பதால் நான் பிளீச்சிங் பவுடர் எடுக்கச் செல்லும்போது என்னை கட்டிப்பிடிப்பது, சேலையை தூக்குவது, ஜாக்கெட்டை கிழிப்பதுமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இது என்னிடம் வேலை செய்யும் பெண்கள் அனைவருக்குமே நன்கு தெரியும். அவர்களும் மேஸ்திரி சொல்வதை கேட்டு நட, இல்லாவிட்டால் உனது வேலைக்கு ஆபத்து என்று எனக்கு அறிவுரை கூறுகிறார்கள். எனது சொந்த வேலை காரணமாக விடுமுறை கேட்டால் ஆய்வாளரிடம் கேட்க சொல்லி அனுப்பி வைக்கிறார். ஆனால் மற்றவர்களுக்கு இவரே விடுமுறை கொடுக்கிறார்.
ஒரு முறை எனது மகளின் பிரசவத்திற்கு ஆய்வாளரிடம் விடுமுறை கேட்டுத்தான் சென்றேன். ஆனால் மேஸ்திரி என்னடைய வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் என்று பதிவு செய்துவிட்டார். இதுசம்பந்தமாக வருவாய் அதிகாரி ராஜேஸ்வரி, டவுன் பிளானிங் அதிகாரி சரோஜா இருவர் முன்னிலையில் ஆய்வாளர் மாரிமுத்து என்னிடம் விடுமுறை கேட்கவில்லை என்று மேஸ்திரிக்கு உடந்தையாக கூறிவிட்டார்.
வருவாய் அதிகாரி ராஜேஸ்வரியும், டவுன் பிளானிங் அதிகாரி சரோஜாவும், ஆய்வாளர் மாரிமுத்துவும், மேஸ்திரி கனகு சபேஸூக்கு ஆதரவாகவும் எனக்கு எதிராகவும் நான் கொடுத்த புகாருக்கு ரிப்போர்ட் எழுதி எனது புகாரை முடித்துவிட்டனர். மேற்படி கனகு சபேஸ் ஏற்கனவே ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்ததுபோல் எனது வாழ்க்கையையும் சீரழிக்கப்பார்க்கிறார்.
இதுசம்பந்தமாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், காவல்துறை துணைத் தலைவர், சமூக நலத்துறை அதிகாரி, உள்துறைச் செயலாளர், முதல்வர் தனிப்பிரிவு அதிகாரி, மாநில மனித உரிமை ஆணையம் போன்ற பதினைந்து அலுவலகங்களுக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறேன். சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகள் என் மீது கருணை கூர்ந்து என்னை தினந்தோறும் வேலை செய்ய விடாமல் எனது உடல் உறுப்புகளை கையால் தொட்டு எனக்கு பாலியல் ரீதியாகவும், மனதளவிலும் தொல்லை கொடுத்து என்னை தற்கொலை செய்யும் அளவுக்கு எனக்கு தொல்லை கொடுக்கும் மேஸ்திரி கனகு சபேஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து என்னை வாழவைப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் என்று கண்ணீருடன் நம்மிடம் இருந்து விடைபெற்றார்.
தமிழகம் முழுவதும் அமைச்சர்களும், பொதுமக்களும் துப்புறவு பணியாளர்கள் பாதங்களை கழுவி மலர் தூவி வணங்கி வரும் இந்த சமயத்தில் பரமக்குடி நகராட்சியில் துப்புறவு பணியாளருக்கு இப்படி ஒரு கொடுமை நடக்கிறது என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. செந்தாமரை புகார் கொடுத்த அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுசம்பந்தமாக விசாரித்து விரிவான பதிவைப் பெற்று வரும் இதழ்களில் இது சம்பந்தமான நடவடிக்கை என்ன என்பதையும் பார்க்கலாம்.
- சூரியன்