முருகனை பாஜக தலைவராக நியமித்தது தலித் என்பதற்காகவா? தலைமை பண்பு என்பதற்காகவா? : திருமா கேள்வி..!
சமீபகாலமாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலித் அரசியலை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானாவின் கவர்னராக நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் பாஜக தலைவர் பதவி காலியாகவே இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
முருகன் நியமிக்கப்பட்டதில் இருந்து ஒரு தலித் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றே முருகனின் சமூகத்தை வைத்தே அரசியல் செய்வதாக பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வருகின்றன. திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு, அதேபோல் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் போன்றோர் மீதும் வழக்குப் பதிவு போன்ற சம்பவங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியுள்ளது திமுக வழக்கறிஞர் பிரிவு. இந்நிலையில் திமுகவின் கூட்டணியில் உள்ள திருமாவளவன், பாஜக திடீரென தலித் சமூகம் மீது அக்கறை காட்டுவது போல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தில் ஆளும் அதிமுகவோடு சேர்ந்து கொண்டு அரசியல் செய்யும் பாஜக நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? என்று கேள்விகளை கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுகவோடு சேர்ந்து கொண்டு அரசியல் செய்யும் பாஜகவுக்கு
- தலித் மக்களுக்கான மாநில ஆணையம் தமிழகத்தில் அமைக்கப்பட வில்லை. அதனை உடனடியாக அமைக்க தமிழக முதல்வர் முன்வருவாரா? கூட்டணி கட்சியான பாஜக இதனை வலியுறுத்துமா?
- ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற வேண்டிய விழிப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் நடைபெறுமா? இந்தக் கூட்டத்தை முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து ஆறுமாதத்திற்கு ஒருமுறை முதல்வர் தலித் மக்களுக்கு எதிரான சாதிக் கொடுமைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறித்து விவாதிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக ஆறுகூட்டங்களை முதலமைச்சர் நடத்தவில்லை. முதல்வர் இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்துமா?
- தலித்துகளுக்கான துணைத் திட்டம் அனைத்து பகுதிகளிலும், அனைத்து துறைகளிலும், தலித்களுக்கு என்று நிதியை ஒதுக்கி அறிவிக்க வேண்டும். இதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வில்லையே! கூட்டணி கட்சியிடம் பாஜக விளக்கம் கோருமா? சட்டம் இயற்ற வலியுறுத்துமா? பக்கத்து மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் இருக்கிறது.
- தமிழகத்தில் சாதிய வன்கொடுமை அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண மையம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக தமிழக முதல்வரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்குமா?
- தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலியில் அமரவிடாமல் தடுப்பதாக மூன்று இடங்களில் வழக்கு பதிவாகி உள்ளதே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக தமிழக அரசை வலியுறுத்துமா? அந்த சாதி வெறியர்களை வெளிப்படையாக கண்டிக்குமா? ஊராட்சித் தலைவர்களை நாற்காலியில் அமரவைக்குமா?
- பெண்கள் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகள் குறித்து புகார் செய்ய டோல் ஃப்ரி நம்பர் இயற்றப்பட்டுள்ளது. இதுபோல் தலித்துகளுக்கெதிரான வன்முறைகளை பதிவு செய்ய டோல் ஃப்ரி எண்களை அறிவிக்க கூட்டணி கட்சியான அதிமுகவை பாஜக வலியுறுத்துமா?
- தமிழகத்தின் மூத்த அமைச்சர் அண்மையில் பழங்குடிச் சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்டச் சொன்னாரே அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கூட்டணி கட்சியான அதிமுகவை பாஜக வலியுறுத்துமா?
- முருகனை பாஜகவின் மாநிலத் தலைவராக நியமித்தது அவர் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைப் பண்பு படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா?
- தனது இறுதி மூச்சுவரை ஜாதியத்தை இந்துத்துவத்தை, சனாதனத்தை மூர்க்கமாக எதிர்த்த புரட்சி போராளி, புரட்சியாளர் அம்பேத்கர் எதிர்ப்பின் உச்சமாக இந்து மதத்தை விட்டு பல லட்சம் பேரோடு வெளியேறியவர். அவரை எதிர்க்கத்தானே வேண்டும் ஆதரிப்பது ஏன்? பாஜக விளக்கம் தருமா?
- ஜாதி ஒழிப்புக்காக பத்து லட்சம் பேரோடு ஒரே நாளில் பௌத்தம் தேடி இந்து மதத்தை ஆட்டம் காண வைத்தவர் அம்பேத்கர். அவர் அளவுக்கு இந்து மதத்தின் மீது தாக்குதல் தொடுத்தது யாருமில்லை. கடவுள் அவதாரங்களை தோல் உரித்தவர் யார்? அப்படிப்பட்ட அம்பேத்கர் உங்களுக்கு எதிரியா? நண்பரா?
இவ்வாறு திருமாவளவன் கேட்டிருக்கும் பத்து கேள்விகளுக்கும் பாஜக தரப்பில் இருந்து பதில் கொடுப்பார்களா? என்றால் கஷ்டம்தான். அம்பேத்கர் பற்றி திருமாவளவன் கேட்டிருக்கும் கேள்விகள் பாஜக திடீரென அம்பேத்கரை தூக்கிப் பிடித்திருக்கும் சமயத்தில் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ‘வில்லங்கமான’ கேள்விகளுக்கு பாஜக தரப்பில் பதிலளித்தால் அடுத்த இதழில் பார்க்கலாம்.
–சூரியன்