அதிகரிக்கும் கொரோனா… : கொள்ளையடிக்கும் மருத்துவமனைகள்…
இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்களை கடவுளாகவும், மருத்துவமனையை கோவிலாகவும் கருதி உலகமே போற்றுகிறது. ஆனால், தமிழகத்தில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில பிரபல மருத்துவர்களும் மருத்துவமனைகளும் செயல்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1000 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23000 தாண்டி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும். சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15500ஐத் தாண்டி உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 200-ஐ நெருங்கியதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் குணமாகியவர்களின் எண்ணிக்கை 12757 என உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5,00,000 நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்படும் நோயாளிகள் பலரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றது. இதில் பல பிரபல தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கொள்ளை நடைபெற்று வருவது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக சென்னையில் இந்த கொரோனா கொள்ளை அம்பலமாகி விட்டது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை என்பதால், இங்கு பணக்காரர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்படும்போது, தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் உடனே பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்கின்றனர். இதை பயன்படுத்தி கொரோனா கொள்ளை அடிக்கும் செயலில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது கூட்டு சதியாகவே பார்க்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு என சங்கம் உள்ளது மருத்துவர்களுக்கும் சங்கம் உள்ளது. இவர்கள் கலந்து பேசாமல் கொரோனா கொள்ளையடிக்க வாய்ப்பில்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சாலைவிபத்தில் சிக்கியவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் அரசு ஆம்புலன்ஸ் டிரைவரை போல், அரசு பரிசோதனை செய்து கொரோனா தொற்று உறுதியான நபர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து பண கொள்ளை அடிக்கும் மனிதாபிமானமற்ற செயல் நடைபெற்று வருகிறது. கொரோனா பரிசோதனை உண்மை தானா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பிறப்பு முதல் இறப்பு வரை பணம் பார்க்கும் மருத்துவமனைகளை கோயில் என்றும் அதில் இருக்கும் மருத்துவர்களை தெய்வமாகவும் நினைக்கிறார்கள். ஆனால், முக கவசம் , கை உறை மற்றும் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் கொரோனா சோதனைக்கு ரேபிட் கருவிகள், சானிடைசர் போன்றவைகளை வைத்து கொள்ளை அடிக்கும் வியாபாரம் செய்து வரும் அரக்கன்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பீதியைக் காட்டி அங்கே வருபவர்களிடம் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டு, ஒரு நாள் சாதாரண வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற, ஒரு லட்சம் என்றும், 600 ரூபாய் மதிப்புள்ள பிபிஇ கிட்களை 10,000 ரூபாய்க்கு கொடுத்துள்ளனர். மேலும் ஐசியுவில் தங்கவேண்டும் என்றால் இன்னும் அதிக தொகை செலுத்தவேண்டும் என்றும் பகல் கொள்ளை அடித்துள்ளார்கள். கொரோனா பேரிடர் காலத்திலும் இப்படி நோயாளிகளிடம் இருந்து காசுபிடுங்கும் முதலாளிகளின் லாபவெறியை, ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனியாவது இதுபோன்ற செயல்களை, தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ராபர்ட் ராஜ்