கடந்த 2007ஆம் ஆண்டு, சன் குழுமத்திற்குச் சொந்தமான தினகரன் நாளிதழ் ‘மக்கள் மனசு’ என்ற பெயரில் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறந்தவர் யார், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்பது போன்ற கேள்விகளை மக்களிடம் கேட்டு, அவர்களது கருத்தை வெளியிடுவதாக அந்த நாளிதழ் கூறியது.
மு. கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என 70 சதவீதம் பேர் கருதுவதாகவும் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே மு.க. அழகிரியை அடுத்த வாரிசு என கருதுவதாகவும் 2007 மே 9ஆம் தேதியன்று கருத்துக் கணிப்பு வெளியானது.
அன்று காலையிலேயே மதுரை நகரில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் நாளிதழை ஆங்காங்கே போட்டு தீ வைத்துக் கொளுத்தினர். மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், சில பேருந்துகளையும் தீ வைத்து எரித்தனர். இதில் 7 பேருந்துகள் எரிந்து சாம்பலாயின. இதற்குப் பிறகு ஒரு கும்பல் மதுரை – மேலூர் சாலையில் உத்தங்குடியில் உள்ள தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தது. பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.
இந்தத் தாக்குதலில், அந்த நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டடர்களாக இருந்த கோபி (28), வினோத் (27), காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தி.மு.கவின் தொண்டரணி அமைப்பாளரும் மு.க. அழகிரியின் ஆதரவாளருமான அட்டாக் பாண்டியின் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் தாக்குதல் நடத்திய படங்களும் ஊடகங்களில் வெளியாயின. இந்த வழக்கில் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தது. கலவரம் நடக்கும்போது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி, ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவர்கள் அனைவரையும் விடுவித்தது. இதனை எதிர்த்து நீண்ட காலமாக முறையீடு செய்யாமல் இருந்த சி.பி.ஐ. 118 நாட்கள் கழித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முறையீடு செய்தது. கொல்லப்பட்ட வினோத்தின் தாயாரும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 17 பேரில் ஒருவர் இறந்துவிட மீதமுள்ள 16 பேர் மீது வழக்கு நடத்தப்பட்டுவந்தது. இவர்கள் ஒரு கட்டத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தபோது, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக இறுதி விசாரணை நடந்துவந்த நிலையில், டி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘இவ்வழக்கில் குற்றவாளிகளான அட்டாக் பாண்டி, ஆரோக்கிய பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையாபாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 3 மாதத்தில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், இவ்வழக்கில் 17வது எதிரியான டிஎஸ்பி ராஜாராம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அவருக்கான தண்டனை மார்ச் 25ல் அறிவிக்கப்படும்’’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கில் தொடர்புடைய ராஜாராம் (தற்போது ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றுள்ளார்) மார்ச் 25 அன்று காலை ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதிகள் அவரிடம், ‘‘போலீஸ் அதிகாரியான நீங்கள் நினைத்திருந்தால், இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம். அந்த இடத்தில் உங்கள் குழந்தைகள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்’’ என்று கூறினர். அதற்கு ராஜாராம், ‘‘சம்பவ இடத்தில் நான் இல்லை. அங்கு நான் இருந்திருந்தால் நிச்சயம் தடுக்க முயற்சி செய்திருப்பேன்’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘சம்பவ இடத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்பவத்தை தடுக்கவேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் நினைத்திருந்தால் குறைந்தபட்சம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கலாம். உங்கள் கடமையை நீங்கள் செய்யவில்லை. அதனால் உங்களை இந்த நீதிமன்றம் குற்றவாளியாக கருதுகிறது. இதுகுறித்து ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினர்.
ராஜாராம் கூறுகையில், ‘‘எனக்கு 62 வயதாகிறது. பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறேன். எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்’’ என்று கோரினார். இதனையடுத்து நீதிபதிகள், ‘‘இவ்வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பதால் 217வது சட்டப்பிரிவின்படி (பொது ஊழியராக இருந்து கொண்டு சட்டத்திற்கு கீழ்ப்படியாத நபர்களை காப்பாற்றுதல்) உங்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை, 221வது சட்டப்பிரிவின் கீழ் (குற்றவாளிகளை உள்நோக்கத்துடன் தப்பிக்க விடுதல்) 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. இரண்டையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்’’ என்று தீர்ப்பு வழங்கினர். இதனைத் தொடர்ந்து ராஜாராம், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.