சிவகங்கை காவல்ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் முழுவதும் மணல் குவாரிகளைத் திறந்து மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்டம் முழுவதும் உவரி மண் பெர்மிட் என்கிற பெயரில் மணல் கடத்தல் அதிகரித்து வந்ததை கண்டித்து சிவகங்கை அரண்மனை முன்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பாக மணல் திருட்டுக்கு காவல்துறையினரும், அதிகாரிகளும் தான் காரணம் என்கிற குற்றச்சாட்டே பிரதானமாக இருந்தது.

இதுகுறித்து விவசாய சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நோய்த் தொற்று பரவலைத் தடுத்து வருகிறது. ஆனால் விவசாயிகள் விளைவித்த பொருட்களை அதாவது காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனையை தடுக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறியும், சிவகங்கை நகர காவல் நிலையத்தின் ஆய்வாளர் மோகன் சாலையோர வியாபாரிகளின் விற்பனை பொருட்களை சாலைகளில் வீசி எறிந்து வியாபாரிகளிடம் கடுமை காட்டுவதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி வியாபாரிகளின் மனதை புண்படுத்துவதாகவும் கூறுகிறார்கள்.
ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து பின்னர் வேறு இடத்திற்கு மாறுதலாகி சென்று மீண்டும் குறுகிய நாட்களில் அதே காவல் நிலையத்திற்கே அரசியல்வாதிகளை பிடித்து வந்து விட்டதாகவும், நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாமூல் வசூல் செய்வதற்கு ஆட்களை நியமித்து இருக்கிறார். இன்ஸ்பெக்டருக்கு துணையாக இரண்டு முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் காவல்நிலையத்திலேயே எப்போதும் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் புகார் கொடுக்க வருவதற்கே அச்சப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ளிட்ட பல இடங்களில் அனுமதி இல்லாத டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகிறது. இது அனைவரும் அறிந்த விஷயம். விற்பனை நேரம் முடிந்தும் எப்போதும் சரக்கு கிடைக்கும். இது தெரிந்தும் இன்ஸ்பெக்டர் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் என்றால் இவர் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது என்கிறார்கள்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் நகர் காவல் ஆய்வாளர் மீது பல்வேறு புகார்களை கூறுகிறார்கள். இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- நமது நிருபர்