தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்..!
கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் சர்வதேச நிறுவனங்களை ஈர்க்க அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை தொழிற்துறையினர் பட்டியலிட்டுள்ளனர்.
அதன்படி வாகனங்களுக்கான ஜிஎஸ்டி யை 28 % ல் 18 சதவிகிதமாக குறைக்க முயற்சிக்க வேண்டும். சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை நோக்கும் நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமான ஊக்கத் திட்டங்களை அறிவிக்கலாம். இந்த நிறுவனங்களின் மூலதன செலவுக்கு மானிய வட்டியுடன் கூடிய எம்எஸ்எம்இ நிதியத்தை உருவாக்கலாம். ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஊக்கத்தொகை வழங்கலாம்.
இந்த நிறுவனங்கள் நடத்தும் ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்கான செலவினத்தில் 25 முதல் 50 சதவிகித மானியம் அளிக்கலாம்.இவற்றுடன் அவற்றின் திட்டச் செலவில் 80 சதவிகிதம்வரை குறைந்த வட்டியில் கடன்வழங்கலாம். இந்த பரிந்துரைகள் பற்றிகருத்து தெரிவித்த மாநில தொழிற்துறை அமைச்சர்சம்பத்,வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆராய முதலமைச்சர் ஒருகுழுவை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடன் வழங்கும் நடைமுறைகளை மேலும் எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மையம் ஆகிய அமைப்புகளை சார்ந்த தொழில் முனைவோரிடையே, காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழக அரசு அளித்த சிறப்பு சலுகைகளின் விளைவாக, சுமார் 1500 நிறுவனங்கள் கொரோனா நோய் தடுப்புக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை துவங்கி இந்தியா முழுவதும் வழங்கி வருவதாக கூறினார். வல்லுநர் குழுவின் அறிக்கைப்படி ஊரடங்கில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சூழ்நிலையைப் பொறுத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும் என்றார்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகளை பெற்று பயன்பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஊக்குவிக்க, தலைமை செயலாளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாக்கி விரைவாக ஒப்புதல் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், தொழில் முனைவோர் தன்னை சந்திக்க விரும்பினால் 24 மணி நேரத்தில் நேரம் ஒதுக்கித் தரப்படும்.
தொழில் முனைவோருக்கும் தொழில் துறையினருக்கும் தமிழ்நாடு அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து தொழில் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.
தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழு ஆலோசனை நடத்துகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுத்து புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்டக்குழுவை கடந்த வாரம் தமிழக அரசு அமைத்தது.
இக்குழுவில் பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெஃப் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் உள்ளனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு ஆலோசனை நடத்துகிறது. இக்குழு பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை மூன்று மாத காலத்திற்குள் தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.