தமிழகம்

இந்திய மரபுசாரா எரிசக்தி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெறுவதற்கும், தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்யும் செலவைக் குறைப்பதற்கும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம், 20 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரமும், 3 ஆயிரம் மெகாவாட் நீரேற்று புனல் மின்சாரமும் மற்றும் 2 ஆயிரம் மெகாவாட் எரிவாயு மின்சாரமும் என மொத்தம் 25 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்படுள்ளது.இது தொடர்பாக இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மரபு சாரா எரிசக்தி துறையில் திறன் படைத்த நிறுவனங்கள் கையாளுகின்ற யுக்திகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கும்.

மேலும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், சந்தை ஆய்வு, திட்ட மேம்படுத்துதல், ஒப்பந்தப்புள்ளிகள் மேலாண்மை, அமலாக்கம் ஆகியவை தொடர்பாக தனது மேம்பட்ட ஆலோசனைகளை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு வழங்கும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button