தமிழகம்

காதலர்களை கொடூரமாக கொன்றவருக்கு தூக்குதண்டனை விதித்தது சரியே!: சென்னை உயர் நீதிமன்றம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் எழில் முதல்வன், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு சின்னமனூர் சுருளி அருவிக்கு மேல் கைலாசநாதர் குகை கோவிலுக்கு செல்லும் வனப்பகுதியில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகர் வந்தார். அவர் காதல் ஜோடியிடம் அரிவாளை காட்டி மிரட்டி, நகை மற்றும் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் எழில்முதல்வன் கொடுக்க மறுத்து, திவாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த திவாகர், தான் வைத்திருந்த அரிவாளால் எழில்முதல்வனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவத்தை பார்த்து கதறிய மாணவி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரையும் திவாகர் துரத்திச்சென்று கால், கைகளை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிஓடினார். கொலையுண்ட காதல் ஜோடியின் பிணங்கள், அழுகியநிலையில் 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டன.
இந்த இரட்டைக்கொலை வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் திவாகரை கைது செய்தனர்.
இந்த இரட்டைக்கொலை வழக்கை தேனி மாவட்ட முதன்மை கோர்ட்டு விசாரித்து, திவாகருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உறுதி செய்யக்கோரி, தேனி மாவட்ட முதன்மை கோர்ட்டு சார்பில் மதுரை ஐகோர்ட்டுக்கு பரிந்துரைத்து, உரிய ஆவணங்களை அனுப்பி வைத்தது.
இதை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘குற்றவாளியான திவாகர் கொடூரமான கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். காதலியின் கண்முன்னே காதலனை கொலை செய்துவிட்டு, அதன்பிறகு அந்த பெண்ணையும் கை, கால்களை வெட்டி உயிருக்குப்போராடிய நிலையில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த கொடூர குற்றத்தை போலீசார் சரியாக நிரூபித்துள்ளனர்” என்று வாதாடினார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில், ‘இந்த வழக்கில் குற்றவாளியான திவாகருக்கு தேனி மாவட்ட முதன்மை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து சரியான தீர்ப்பை பிறப்பித்துள்ளது. ஒருபுறம் இதுபோன்ற கொடூர குற்றவாளிகள் மீது கொஞ்சமும் கரிசனம் காட்டக்கூடாது என பொதுமக்கள் கருதுகின்றனர். அதேநேரம் மற்றொருபுறம் தூக்கு தண்டனையே வழங்கக்கூடாது எனவும் குரல் எழுப்பப்படுகிறது. ஆனால் இந்த வழக்கை பொருத்தமட்டில், இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு கருணை காட்டமுடியாது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை நாங்களும் உறுதி செய்கிறோம்‘ என தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button