சலூன் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 இழப்பீடு கோரி வழக்கு : அரசு பதிலளிக்க உத்தரவு..!
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 60 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. இருப்பினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று கடந்த 12-ம் தேதி நாட்டு மக்களுடன் உரையாற்றியபோது பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதற்கிடையே, ஊரடங்கால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நல வாரியத்தில் பதிவு பெறாத முடி திருத்தும் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் சமர்ப்பித்து ரூ.2,000 நிதியுதவி பெறலாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்:
“தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரண உதவித்தொகை உட்பட பொது விநியோகத் திட்டத்தின் மூலம், அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.
முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 14 ஆயிரத்து 667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்காததால், நலவாரியத்தில் பதிவு செய்யாத நபர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடமும், பேரூராட்சிப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள் இருக்கும் இடத்தின் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும்.
அம்மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சியர்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, ஏற்கெனவே முடி திருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இரண்டு தவணையாக ரூ.2,000 ரொக்கமாக வழங்கியது போன்று, நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூ.2,000 ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் நிர்வாக முதன்மை ஆணையர் வழங்குவார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கிராமப்புறங்களில் மட்டும் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டன.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் சலூன் கடைகளை அதன் உரிமையாளர்கள் திறந்தனர். பின்னர் கடைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். மேலும் முடி திருத்தும் தொழிலாளர்கள் கையில் கையுறையும், முக கவசமும் அணிந்து பணிபுரிந்தனர். முடி திருத்துவதற்காக பலர் வரிசையில் கடை முன்பு காத்திருந்தனர். கிராமப்புறங்களில் கடைகள் பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் உள்ளதால் ஒருவருக்கு முடி திருத்தும் வரை மற்றவர்கள் காத்திருந்தனர். ஒரு சில கடையில் ஒரே ஒரு நாற்காலி மட்டும் இருந்ததை காணமுடிந்தது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று முடி திருத்தம் செய்தனர்.
லாக் டவுனால் பாதிக்கப்பட்டுள்ள சலூன் ஊழியர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஊரடங்கிற்கு முன்னதாக மாதம், 15,000 ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடித்திருத்த தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முடித்திருத்த தொழிலாளருக்கும், தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
முடிதிருத்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் நிபந்தனையுடன் திறக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திர பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது கிராம பகுதிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக சலூன் கடைகளை திறப்பது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, ஒரு வாரத்திற்குள் இது குறித்து பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மே 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.