அழகிரி அன்று முதல் இன்று வரை தொடர் -2
அழகிரி அன்று முதல் இன்று வரை – தொடர் 1
நீண்ட இடைவெளிக்குப்பின் சட்டப்போராட்டத்தின் உதவியால் ஜாமீனில் வெளியே வந்தார் அழகிரி. தா.கிருஷ்ணன் கொலை வழக்கு தீவிரமாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் 2006 சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. அப்போது திமுகவின் தென்மாவட்ட தேர்தல் வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார் அழகிரி. இந்த தேர்தலில் மதுரையைத் தாண்டி தென்மாவட்டங்களில் பல்வேறு தொகுதிகளில் அழகிரி ஆதரவாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மீண்டும் முதலமைச்சர் ஆனார் கருணாநிதி.
அழகிரியின் ஆதரவாளர்கள் சிலருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. முக்கியமாக அழகிரியின் எதிர்ப்பாளரான பிடிஆர் பழனிவேல்ராஜனுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார் கருணாநிதி. அது அழகிரிக்கு லேசான அதிருப்தியை கொடுத்தது என்றாலும் அமைச்சராக பதவியேற்ற உடனேயே பழனிவேல்ராஜன் மரணமடையவே அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
2006க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் பத்துக்கும் அதிகமான இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுகவே வெற்றி பெற்றது. அந்த இடைத்தேர்தலில் எல்லாம் அழகிரியின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது. குறிப்பாக திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு வார்டு வாரியாக வியூகம் வகுத்து வெற்றியை பெற்றுக்கொடுத்தார் அழகிரி. இந்த வெற்றிக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.கே.ரித்திஸ் அழகிரிக்கு உறுதுணையாக செயல்பட்டார். இந்த வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அழகிரி திருமங்கலம் பார்முலா என்று சொல்ல இதையே திருமங்கலம் பார்முலா என்று எழுதத் தொடங்கினர்.
அழகிரி சொன்னது வார்டு பார்முலா என்று. ஆனால் பத்திரிகைகள் எழுதியது வாக்குக்கு பணம் கொடுத்தது என்கிற அடிப்படையில். திமுக மீதான திருமங்கலம் பார்முலா விமர்சனம் இன்றும் நீடிக்கிறது. மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருமங்கலம், பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம், கம்பம், திருச்செந்தூர் என்று அடுத்தடுத்து வந்த இடைத்தேர்தல் வெற்றிகள் அழகிரியின் செல்வாக்கை வெகுவாக உயர்த்தின. இவையெல்லாம் மதுரை மண்டலத்திற்குள் வரும் தொகுதிகள். விளைவு தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்கிற புதிய பதவியை உருவாக்கி அழகிரிக்கு கொடுத்து அவரது பங்களிப்பை அங்கீகரித்தது திமுக தலைமை. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் அழகிரிக்கு அங்கீகாரம் ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் அழகிரியின் ஆதரவாளர்கள் செய்யும் அதிகார அத்துமீறல்கள், வன்முறைகள், கட்டப்பஞ்சாயத்துக்கள், பணவசூல்கள் எல்லாம் அதிகரித்துக் கொண்டிருந்தன.
பத்திரிகைகளிலெல்லாம் அழகிரியையும் அழகிரியின் ஆதரவாளர்களையும் பற்றிய செய்திகளை பரபரப்பாக வெளியிட்டுக் கொண்டிருந்தன. இடைப்பட்ட காலத்தில் திமுகவிற்கு உள்ளேயே ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடித்துக் கொண்டிருந்தது. அதன் பின்னணியில் இருந்தது தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பு. திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வரவேண்டும் என்கிற கேள்விக்கு எழுபது சதவிகிதம் பேர் ஸ்டாலின் என்று சொன்னதாகவும், அழகிரி, கனிமொழி தலா இரண்டு சதவிகிதம் பேர் ஆதரிப்பதாகவும் சொன்னது அந்த கருத்துக்கணிப்பு. கூடுதலாக சென்னை மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் அழகிரிக்கு பூஜ்யம் சதவிகிதம் பேர் ஆதரவு இருப்பதாகவும் சொன்னது அந்தக் கருத்துக்கணிப்பு. அழகிரியின் செல்வாக்கை முற்றிலுமாக கேள்வி எழுப்பிய அந்த கருத்துக் கணிப்பு அழகிரியின் ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்தது. அதன்விளைவாக மதுரையில் வன்முறை வெடித்தது.
மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்திற்கு முன்னாள் திரண்ட விசமிகள் தினகரன் அலுவலகத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். தினகரன் அலுவலகம் தீ பற்றி எரிந்தது. அப்போது அலுவலகத்திற்குள் பணியில் இருந்த கணிப்பொறியாளர்கள் கோபி, வினோத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரும் தீக்கிரையாகினர். தினகரன் எரிப்பு சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உண்மையில் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை திமுக தலைமை விரும்பவில்லை. அதை வெளியிடப் போகிற செய்தி தெரிந்ததும் அதை வெளியிடக் கூடாது என்றது திமுக தலைமை. ஆனாலும் அதையும் மீறி தினகரனில் அதை வெளியிட்டிருந்தார்கள். அதன்உரிமையாளரான கலாநிதிமாறனும், தயாநிதிமாறனும். தினகரன் விவகாரம் திமுகவிற்குள் பெரிய பிரச்சனையை உருவாக்கியது. அழகிரி தரப்பு தினகரன் உரிமையாளர்களை விமர்சிக்க தினகரன் நாளிதழ் அழகிரியை காட்டமாக விமர்சித்தது. நடந்து கொண்டிருப்பது குடும்ப பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா? வாரிசு பிரச்சனையா? சொத்துப் பிரச்சனையா? அல்லது எல்லாம் சேர்ந்த பிரச்சனையா? என்கிற கேள்வி எழுந்தது. அது தயாநிதி மாறனின் பதவி விலகலில் வந்து முடிந்தது.
கருணாநிதி, முரசொலிமாறன் குடும்பத்திற்குள் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. தினகரன் எரிப்பு சம்பவம் ஓயாத நிலையில் தா.கிருஷ்ணனன் படுகொலை வழக்கிலிருந்து அழகிரி உள்ளிட்ட 13 பேரை விடுதலை செய்தது சித்தூர் நீதிமன்றம். அந்த தீர்ப்பு புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் விடுதலை என்றால் தா.கிருஷ்ணனை படுகொலை செய்தது யார் என்ற கேள்விகளை ஊடகங்கள், பத்திரிகைகள் எல்லாம் எழுப்பின. தா.கிருஷ்ணன் படுகொலை, தினகரன் எரிப்பு, திருமங்கலம் பார்முலா என்று அழகிரியைச் சுற்றி, சர்ச்சை அணிவகுத்த வண்ணம் இருந்த நிலையில் 2009ல் நடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை மக்களவை திமுக வேட்பாளராக களமிறங்கினார் மு.க.அழகிரி. அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மோகன் போட்டியிட்டார். ஈழப்பிரச்சனையை முன்வைத்து திமுகவிற்கு எதிரான பிரச்சாரம் தீவிரம் பெற்ற அந்த தேர்தலில் சுமார் நான்கரை லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் மு.க.அழகிரி. மக்களவைக்கு முதல்முறையாக தேர்வான அழகிரி மன்மோகன் சிங் அமைச்சரவையில் உணவு மற்றும் இரசாயனத்துறை அமைச்சரானார்.
மக்களவைத் தேர்தலில் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்தே செயல்பட்டனர். ஆனால் அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் பிரச்சனைகள் தீராமலேயே இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி அண்ணாவிற்குப் பிறகு கருணாநிதிதான் என் தலைவர். அவருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றார். இது ஸ்டாலினுக்கு எதிரான கருத்தாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் அழகிரி. 2011 தேர்தலுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என்றார் அழகிரி. அது ஜெயலலிதாவை ஆத்திரப்படுத்தியது. அதற்கு பதிலடி கொடுக்க மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தினார். அதுதான் 2011 தேர்தல் பிரச்சாரத்துக்கான ஆரம்பம். திமுக அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தில் அழகிரியை கடுமையாக விமர்சித்துப் பேசினார் ஜெயலலிதா. கருணாநிதியையும், ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசுவதையே பழக்கமாக கொண்டிருந்த ஜெயலலிதா முதல்முறையாக அழகிரியை விமர்சித்துப் பேசியது அரசியல் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது.
தொடரும்…