அரசியல்இந்தியா

ஜனாதிபதி ஆகிறாரா தமிழிசை..?

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளது. ஜூலை மாதம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்த முறை பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்க பிரதமர் முடிவு எடுத்திருப்பதாகவும், அதற்கு தகுதியான ஒருவரை தேர்வு செய்யும் பணியில் பிரதமர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா நிறுத்திய ராம்நாத் கோவிந்திற்கு 65 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் தற்போது 50 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கக் கூடிய சூழல் உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறி விட்டன. ஜம்மு – காஷ்மீரிலும் சட்டசபை முடக்கப்பட்டுள்ளது. மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் வாக்களிக்க தகுதியான 776 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நாடு முழுவதும் 31 சட்டசபைகளில் 4126 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுக்களுக்கான மதிப்பும் மாறுபடும். அதன்படி பார்த்தால் உத்திரப்பிரதேசத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மதிப்பு அதிகமாக இருக்கும். அதனால் தான் உத்திரப்பிரதேசத்தில் குறைந்தபட்சம் 250 தொகுதிகளில் வெற்றிபெற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அதுபோல் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களிலும் அதிக சட்டமன்ற உறுப்பினர் கிடைத்தால் ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற உதவியாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் புதிய உத்தியை கடைபிடிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில குறிப்பிட்ட எதிர்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து பிரதமர் ஆலோசித்து வருவதாக தெரிய வருகிறது. கடந்த காலத்தில் அப்துல்கலாம் நிறுத்தப்பட்டது போல் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆலோசனை வழங்கும்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பிரதமருக்கு மிகவும் நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். அதேபோல் ஒடிசா முதல்வர் நவின்பட்நாயக் உடனும் பேசப்பட்டுள்ளது.


இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தவும் பிரதமர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தெலுங்கானா ஆளுனராக உள்ள தமிழிசை சௌந்திரராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரது பெயர்களும் முன்னிலையில் உள்ளதாக தெரிகிறது. இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஒருவேளை ஆண் ஒருவரை குடியரசுத் தலைவராக நிறுத்த தீர்மானித்தால் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் சிவன், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளனவாம்.
இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் 2024 மக்களவை தேர்தலுக்கும் தற்போதே தயாராக வேண்டிய நிலையில் பாரதிய ஜனதா உள்ளது. அதற்குள் இந்தப் பிரச்சனைகளை எல்லாம் பாரதிய ஜனதா தலைமையும், பிரதமரும் எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பதிலிருந்து விடை கிடைத்துவிடுமா என எதிர்பார்க்கப் படுகிறது. மொத்தத்தில் நாட்டின் அடுத்த குடியரசுத்தலைவராக தேர்வாகக் கூடிய பட்டியலில் இருப்பவர்கள் நிச்சயம் இந்தி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button