உற்பத்தியை தொடங்கிய திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்..!
கொரோனா காரணமாக 3ஆம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, திருப்பூரில் 70 சதவீத பின்னலாடை நிறுவனங்கள் விதிகளுக்கு உட்பட்டு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன. 20 சதவீத அளவிலான ஊழியர்களுடன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
பணிக்கு வரும் ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொழிலாளர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
ஊழியர்களுக்கு அடிக்கடி வெப்ப பரிசோதனை மேற்கொள்ள, தமிழக அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளது. நிறுவனங்களை 2 நாட்களுக்கு ஒரு முறை கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தவும், 200 முதல் 1000 ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவர்கள் மூலம் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் செயல்பட தொடங்கும் தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.