தமிழகம்

போலி நீதிமன்ற ஆணையுடன் சிக்கிய ஆந்திர கும்பல்

திருப்பூர் மாவட் ட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(40), அருணோதயா என்கிற பெயரில் நிறுவனம் நடத்திவருகிறார். மேலும் தனது நிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த சிலுக்குரிப் பேட்டையில் செயல்பட்டுவரும் இடுப்பிலபாடு காட்டன் மில்லில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை சுமார் ரூபாய். 70 லட்சம் மதிப்பில் நூல் கொள்முதல் செய்துள்ளார். மேலும் 44 லட்சம் வரை திருப்பி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நூல் தரத்தில் வேறுபாடு ஏற்பட்டதால் மீதி தொகை ரூபாய் 26 லட்சத்தை அருணோதையா மில் நிர்வாகம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.

இந்நிலையில் நூல் வியாபார இடைத்தரகர்கள் அர்பித் ஜெய் மற்றும் சின்னசாமியுடன் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார், வெங்கடகிருஷ்ணா, வெங்கடேஷ்வரலூ மற்றும் போலீஸ் யூனிபார்மில் ஆந்திர போலீஸ் கோபி ஆகிய ஆறு பேர் பல்லடம் காவல் நிலையத்திற்கு வந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வருவதாகவும், இடுப்பிலபாடு காட்டன் மில்லில் நூல் கொள்முதல் செய்ததில் 26 லட்சம் பல்லடத்தை சேர்ந்த அருணோதயா நிறுவனம் தராததால் சிலுகுரிப்பேட் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், கோர்ட் உத்தரவுப்படி பிடிவாரண்ட் பெற்று உரிமையாளர் தமிழ்செல்வனை போலீஸ் உதவியுடன் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து தமிழ்செல்வனுக்கு பல்லடம் போலீசார் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து நேரில் ஆஜரான தமிழ்செல்வன் கோர்ட் உத்தரவு குறித்து சந்தேகம் அடைந்து தனது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இடைப்பட்ட நேரத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஆந்திரா ஆசாமிகள் கோர்ட் ஆர்டருடன் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதனிடையே கோர்ட் ஆர்டர் போலியாக தயாரிக்கப்பட்டதை கண்டறிந்த வழக்கறிஞர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து உஷாராண போலீசார் புகார் கொடுக்க வந்த மூவரை சுற்றி வளைத்து காவல் நிலையத்திற்குள் அழைத்துச்சென்றனர். ஆனால் ஆந்திர போலீஸ் யூனிபார்மில் இருந்த போலீஸ் கோபி அங்கிருந்து தலைமறைவானார். இந்நிலையில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பிடிபட்ட மூவரிடமும் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டதில் போலியாக கோர்ட் ஆவணங்கள் தயாரித்து இது போன்று வராக்கடன்களை வசூலிக்க தொழில் அதிபர்களை அழைத்துச்சென்று மிரட்டி பணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போன்று வசூலிக்க போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதும், பல்லடத்தில் மட்டும் 5 நிறுவனங்களில் இது போன்று வராக்கடனை வசூலிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து போலி கோர்ட் ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட குண்டூரை சேர்ந்த முடலபடி ரவிக்குமார்(40), குண்சாலா வெங்கடகிருஷ்ணா(49), டாகிபார்த்தி வெங்கடேஷ்வரலு(48) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் நிறுவன உரிமையாளர் பிரம்மநாயுடு, மேலாளர் சத்தியநாராணராவ், ஆந்திர போலீஸ் கோபி ஆகியோரை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பாக்கியை வசூலிக்க போலி கோர்ட் ஆவணங்களுடன் போலீஸ் ஸ்டேசனில் போஸ் கொடுத்த ஆந்திர ஆசாமிகள் சிறைக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button