சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆளுநர் ஆட்சி வர வேண்டும் முன்னாள் எம்.பியின் பகீர் கடிதம்..!
உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்பியும் தற்போதைய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான நரசிம்மன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்துவரும் மே அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தும் சூழல் நிலவ வாய்ப்பில்லை என்று அக்கடிதத்தில் நரசிம்மன் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம், மனநிலை இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை என்று நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதால், தேர்தலை தள்ளி வைப்பதே சரியாக இருக்கும் என்று சொன்ன அவர், ஒரு ஆண்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நோய்த்தொற்று மனநிலை மாறி, ஒரு ஆண்டு கால இடைவெளிக்குப்பிறகு தேர்தல் என்பதே தமிழகத்தில் சரியான முறையாக இருக்கும் என்றும் நரசிம்மன் கூறியுள்ளார்.நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோகமான வெற்றியை பெற்றது. அதேபோல், எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெரும் என வல்லுனர்கள் கருத்து சொல்லி வரும் சூழலில் முன்னாள் எம்.பியின் இந்த முன்னெடுப்பு பலரையும் உற்றுநோக்கச் செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலைப்போல், அரசியல் களத்தில் நடப்பதை யாரும் கணிக்க முடியாது என்பதே இப்போதைய தெளிவு.