அரசியல்

மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக ஐ.பி.செந்தில்குமார்

பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் இரண்டாவது முறையாக பழனி சட்டமன்றத் தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்கட்டான இந்த கொரோனா காலங்களில் பழனி சட்டமன்ற தொகுதி மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நிவாரணப் பொருட்கள் வழங்குதல், கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைகளுக்கே சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க மருத்துவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குதல் போன்ற பணிகளை துரிதமாக செயல்படுத்தி கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மக்கள் அதிகம் பாதிக்கப்படாமல் தடுப்பு நடவடிக்கைகளை செய்துள்ளார்.

பொது வாழ்க்கையில் தனது தந்தையைப் போன்று இவரும் இரவு பகல் பாராமல் பழனி சட்டமன்றத் தொகுதி முழுவதும், பம்பரமாக சுழன்று கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டு, செயல்பட்டதால் தான் இரண்டாவது முறையாகவும் அப்பகுதி மக்கள் இவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்துள்ளனர். கணவர் வழியில் இவரது மனைவி மெர்சி செந்தில்குமாரும் சொந்தமாக அறக்கட்டளை நடத்தி அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

கொரோனா காலங்களில் நத்தம் பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், ஏழைகள் என கஷ்டப்படும் மக்களுக்கு, உணவு, கபசுர குடிநீர் வழங்கினார். பசியால் வாடும் விழிப்பு நிலை மக்களுக்கு அன்றாடத் தேவையான உணவுகளை அவர்களின் வீடுகளுக்கேச் சென்று வழங்கினார். அப்பகுதிகளில் வசித்து வரும் திருநங்கைகளின் வீடுகளுக்கு அரிசி வழங்கினார்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள், மாஸ்க், சானிடைசர் போன்ற பொருட்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். நத்தம் நகரத்தை பசியில்லா நகரமாக மாற்றி அப்பகுதி மக்களின் வாழ்வில் ஒளிமயமான, சந்தோஷமான எதிர்காலத்தை உருவாக்குவதே தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் மெர்சி செந்தில்குமார்.

பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாரின் சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டபேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக நியமித்து செந்தில்குமாரை கௌரவப்படுத்தியிருக்கிறார். சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக தேர்வான செந்தில்குமாருக்கு பழனி தொகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பழனிக்கு வருகை தந்த பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அர்ச்சர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் உதவித் தொகையை வழங்கினார். பின்னர் நமது செய்தியாளரிடம் அப்பகுதி மக்களின் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட இருப்பதாகவும், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான குளிர்பதன கிடங்கு அமைப்பதற்காக தற்போது இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார்.

பழனி ஊராட்சி ஓன்றியப்பகுதி மற்றும் தொப்பம்பட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. பழனி&கொடைக்கானல் இடையே ரோப்கார் அமைப்பதற்கான திட்டத்தில் உள்ள இடர்பாடுகள் சரி செய்வது குறித்து சென்னையில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் பேசியதாகவும், இந்த இடர்பாடுகளை சரி செய்யப்படக் கூடியதே என்று அதிகாரிகள் தெரிவித்ததால் திட்டம் நடை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுப் பணிகள் துவங்க உள்ளது. கொடைக்கானலில் ஹெலிபேடு தளம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், கொடைக்கானலிருந்து கேரள பகுதிக்கு சாலை அமைக்கும் பணி துவங்க இருப்பதாக கூறினார்.

பழனி&கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம், கொடைக்கானல்&கேரளா சாலை அமைக்கும் திட்டம், ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், போன்ற திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றினால் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் சாதனைகள் பழனி தொகுதி மக்களின் இதயங்களில் என்றும் நிறைந்திருக்கும்.

முகமது ஆரிப்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button