புதையல் ரகசியம் சொல்வதாக மோசடி..!
நாடே கொரோனாவால் முடங்கி கிடக்க, தேங்காயை சுற்றவிட்டு புதையல் ரகசியம் சொல்வதாக, லட்சகணக்கில் பணம் பறிக்க திட்டமிட்ட மந்திரவாதி கும்பல் கமுதியில் கையும் களவுமாக சிக்கியுள்ளது.
தேங்காய் விற்கும் விலையில சட்னி அரைக்கலாமா, இனிப்பு பர்பி செய்யலாமா, தேங்காய் சாதம் செய்யலாமா என்று யோசிப்போர் மத்தியில், ஒற்றைத் தேங்காயை சுற்றவிட்டு புதையலைக் கண்டுபிடித்து தருவதாகக் கூறி, ஊரார் தலையில் சட்னி அரைத்த மந்திரவாதி செல்வக்குமார்.
தோப்படைப்பட்டிமந்திரவாதி செல்வக்குமாரை, சக்திமிக்கவர்… அவர் கையை சுத்தினால்தேங்காயும் சுற்றும் அவர் கையை நிறுத்தினால்தேங்காயும் நின்றுவிடும்..! எத்தனை மைல் தூரத்தில்உள்ள புதையலையும் இருந்த இடத்தில் இருந்தேஅதனை சரியாக அடையாளம் கண்டுசொல்லும் வல்லமை மிக்கவர் என்றுஉள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்செல்லப்பாண்டி, கிராம உதவியாளர் மகாதேவன்,முருகராஜ், தூத்துக்குடி அருள்சாமி, ஏனாதியை சேர்ந்த முத்துஎன்ற பெண் என ஊர்ஊருக்கு ஒரு மார்கெட்டிங் டீம்வைத்து மோசடிகளை அரங்கேற்றியதாக கூறப்படுகின்றது.
அனைவரது செல்போனிலும் தேங்காயை சுற்றவிடும் வீடியோ இதனை காண்பித்து வசதி படைத்தவர்களுக்கு வலைவிரித்து புதையல் ஆசையை தூண்டி அவர்களிடம் சில லட்சங்களை ஏமாற்றி பிடுங்குவது தான் இந்த கும்பலின் நோக்கம்..! என்று கூறப்படுகின்றது.
இது குறித்த புகாரின் பேரில் விரிவான விசரணைக்கு உத்தரவிட்டார் காவல்கண்காணிப்பாளர் வருண்குமார். சிறப்பு தனிப்படையினர் புதையல் எடுக்க ஆசை தெரிவிக்க செல்வக்குமார் தேங்காயை சுற்றவிட்டு கண்களை கட்ட, கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி தலைமையிலான மார்க்கெட்டிங் கும்பல் ஆனையூர் காட்டுப்பகுதியில் மந்திரவாதி சொன்ன இடத்தில் இருந்து தங்க நாணயம் மற்றும் வைரப்புதையல் எடுத்து கொடுத்துள்ளனர்.
அவை அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மோசடி மந்திரவாதி செல்வக்குமார், செல்லப்பாண்டி உள்ளிட்ட 6 பேரை சுற்றிவளைத்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதையல் ரகசியம் வெளிச்சத்திற்கு வந்தது.
உழைக்காமல் ஒரே நாளில் பெரும்பணக்காரன் ஆகணும் என்ற ஆசையில் சுற்றுவோரை கண்டறிந்து, அவர்களிடம் ஆசைவார்த்தையை கூறி, புதையல் இருப்பதை நம்பவைக்க தேங்காயில் மிகவும் மெல்லிய நூல் கட்டி அதனை சுற்றவைப்பது.
புதையல் இருப்பதாக கூறப் போகும் இடத்தில், மதுரையில் இருந்து வாங்கி வந்த போலியான கற்களை வைரகற்கள் போல புதைத்து வைப்பது, போலியான தங்க நாணயங்களை தயாரித்து புதைத்து வைத்து மந்திரத்தின் மூலம் கண்டறிவது போல நடித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை கறப்பது என்று திட்டமிட்ட நிலையில், விரைவாக துப்பறிந்து இந்த கும்பலை சுற்றிவளைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
6 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கும்பலிடம் இருந்து 6 சாமி சிலைகளையும், போலியான வைரக் கற்களையும், தங்க நாணயங்களையும் செப்புத் தகடுகளையும் கைப்பற்றினர்.
பலர் இந்த தேங்காய் சுற்றும் வீடியோவை பார்த்து நூல் ஏதும் தெரியவில்லை என்பதால் செல்வக்குமார் உண்மையிலேயே சக்தி மிக்கவராக இருப்பாரோ என்று நினைத்துள்ளனர். ஆனால் உன்னிப்பாக கவனித்ததால் செல்வக்குமாரின் நூல் வித்தை தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். உழைத்து சம்பாதிக்காமல் குறுக்கு வழியை தேடிச் சென்றால் இதுபோல மோசடிக் கும்பலிடம் சிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர் காவல்துறையினர்.
– ராஜா