முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக வெற்று விளம்பரம் செய்யும் தமிழக அரசு : வைகோ வலியுறுத்தல்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா கொடும் துயரம் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து கடந்த பத்து மாதங்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 12.94 இலட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சுமார் 80.81 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் இந்நிறுவனங்கள் கொரோனா பொது முடக்கத்தால் மூட வேண்டிய நிலை உருவானதால் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவானது. கடந்த செப்டம்பர் முதல் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் முழு வீச்சோடு இயங்க முடியாமல் தவித்து வருகின்றன.
இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் விலை அதிகரித்து விட்டன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 32 % ; அலுமினியம் 26 % ; இயற்கை ரப்பர் 52 % ; காப்பர் 77 % என தாறுமாறாக மூலப் பொருட்கள் விலை ஏற்றத்தால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்கவோ உற்பத்தியைத் தொடங்கவோ முடியாமல் கைபிசைந்து நிற்கின்றன.
பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் இத்தகைய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தமிழக அரசு, முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக வெற்று விளம்பரம் செய்து கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.ஈ. ரகுநாதன் அரசின் கவனத்திற்குக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அதில் 35 விழுக்காடு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதால் மத்திய, மாநில அரசுகளின் உடனடிக் கவனம் தேவைப்படுவதாகவும் இல்லையெனில் பொருளாதார நிலையில் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும்; வேலையின்மையால் தொழிலாளர்களின் நிலைமை மோசமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் தொழில் வரி ஆகியவற்றை இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும்; ரூ. 100 கோடி வரையில் இங்குள்ள நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதுடன் கூடுதல் கடன் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்றும், நிலையான மின் கட்டணம் வசூலிப்பதை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சீராக இயங்கச் செய்யவும், தொழிலாளர்கள் வேலை இழப்பைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு வைகோ தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
– நமது நிருபர்