ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐம்பது நாட்களை நெருங்கிவிட்டது.நகர் புறங்களில் மட்டுமே நங்கூரமிட்டு ஆளும்கட்சியினரும், எதிர் கட்சியினரும், போட்டி போட்டுக்கொண்டுநிவாரண பொருட்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். ஆனால்,அதில் ஒரு சதவீதம் கூடகிராமங்களுக்கு சென்றடையவில்லை.
இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் போன்ற நகரங்களில் மட்டும் காலையிலும், மாலையிலும் அரசியல் தலைவர்கள் காரில் பந்தாவாக உலாவருவதோடு அரிசி,பருப்பு,காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களை அள்ளிக் கொடுப்பதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் எங்களுக்கு நிவாரணம் கிடைக்குமா.? காத்திருக்கிறார்கள் பல கிராமவாசிகள்.
உண்மையிலேகொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் அது கிராமம்தான். அப்படிப்பட்ட கிராமப்புறங்களைஎந்த அரசியல் கட்சி தலைவர்களும்அரசு அதிகாரிகளும், கண்டுகொள்வதே கிடையாது. பெரு நகரங்களில் வசதிபடைத்தவர்கள்நடுத்தர மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். அவர்களுக்கு போதுமான தேவைகளும்அருகிலே கிடைத்து விடும். ஆனால் கிராமப்புறங்களில்அப்படியல்ல அன்றாட தேவைகள் எதுவுமேகிடைக்காமல் அவதிப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு நிறைய கிராமங்களை கூறலாம், நயினார் கோயில் ஒன்றியம், வாகவயல் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களான வாகவயல், கருப்பூர், குண்டத்தூர் போன்ற குக்கிராமத்தில் வசிப்பவர்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். விவசாயம் இல்லாத காலங்களில் தினக்கூலி வேலை செய்தால் மட்டுமே அன்றாட பிழைப்பு ஓட்டமுடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் போக்குவரத்து வசதியில்லாத நிலையில், அன்றாட தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஒரு சிறிய பொருள் வாங்க வேண்டும் என்றாலும் 5 கிலோமீட்டர் தொலைவில் போகவேண்டும். அப்படிபட்ட சூழலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தேவிபட்டினத்திற்கு பால் பாக்கெட் வாங்க சென்ற இரு இளைஞர்களின் டூவிலரை மடக்கி பிடித்த போலீஸ் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். ஊரடங்கு முடிந்த பிறகு கோர்ட்டிலே பணத்தை கட்டிவிட்டு வண்டியை பெற்றுக் கொள் என்று அந்த இரண்டு இளைஞர்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.
இப்படிஅன்றாட தேவைகளுக்கு அவஸ்தை பட்டுவரும் கிராமமக்கள்ஏராளம். காயம் பட்டவருக்கு முதலில்மருந்து போடாமல், வேடிக்கை பார்ப்பவருக்கு மருந்து போடுகிற கதையாகிவிடும்.
இதுகுறித்து கிராம பொதுமக்களும் அதிமுகவினர் சிலரும் நம்மிடம் கூறுகையில், அதிமுக, திமுக போன்ற கட்சிகளின் நிர்வாகிகள் எங்களின் கிராம பகுதிகளுக்கு இன்னும் வரவில்லை. குறிப்பாக அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி நகர் பகுதியில் அதாவது பரமக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகருடன் சில இடங்களில் கொடுத்து விட்டு போட்டோவுக்கு தலையை காட்டி விட்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்று விடுகிறார். முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் இவரது மனைவி தோல்வி அடைந்தார். அதனால் தோல்வி அடைந்தாலும் மக்களுக்கு உதவி செய்கிறார் என்று மக்களிடம் பெயர் வாங்கி 2021 தேர்தலில் நின்று வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் மீது மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வருகிறார் என்று கூறினார்கள்.
இதேபோல் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன் நிவாரணப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார். திருவாடனை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சென்னையில் இருப்பதால் அந்த தொகுதிக்கு இதுவரை யாரும் எந்தவித நிவாரணமும் வழங்க வில்லை என்கிறார்கள். திருவாடனை தொகுதியின் எம்எல்ஏ தொகுதிக்கு வராத நிலையில் அவரது பணிகளையும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பணிகளை ஒதுக்குவது போன்ற அனைத்து வேலைகளையும் பார்க்கும் மாவட்டச் செயலாளர் முனியசாமியும் திருவாடனைத் தொகுதியை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.
இதுகுறித்து பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிராபாகரை தொடர்பு கொண்டு கேட்டபோது.. நான் ஏற்கனவே பல இடங்களில் பெரும்பாலும் கிராமங்களில் எனது சொந்த செலவில் பொருட்களை வழங்கி இருக்கிறேன். சில தினங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில கிராமங்களுக்கு செல்லமுடியவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் எனது சட்டமன்ற தொகுதி முழுவதும் கொடுத்து முடித்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார்.
- நமதுநிருபர்