கொலையில் முடியும் முறையற்ற உறவுகள்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அந்தப் பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே கடந்த 18ஆம் தேதி, கைகள் கட்டப்பட்ட, வாயில் துணிவைத்து அடைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
விசாரணையில் அந்தப் பெண் நாமக்கல் மாவட்டம் ராம்புதூரைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ரமேஷ் என்பவரது மனைவி திருமங்கை என்பது தெரியவந்தது. ஒரே ஓட்டலில் பணிபுரிந்து வந்த இருவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துள்ளனர்.
கடந்த 17ஆம் தேதி மாலை கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற திருமங்கை இரவு வீடு திரும்பவில்லை என்கிறார் ரமேஷ். செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆன நிலையில், காலை திருமங்கையின் உடல் மீட்கப்பட்ட செய்தி கிடைத்துள்ளது.
இதனையடுத்து திருமங்கையின் செல்போன் பதிவுகளை ஆராய்ந்த போலீசார், கடைசியாக அவர் சேலம் மாவட்டம், சோத்துநாயக்கன்காட்டைச் சேர்ந்த தனபால் என்பவனிடம் பேசியிருப்பதை கண்டறிந்தனர். நாமக்கல் சென்று அவனை பிடித்து வந்து விசாரணை செய்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
22 வயதான தனபால் நாமக்கல் பகுதியில் ஜே.சி.பி இயந்திரம் ஓட்டிக் கொண்டிருந்தபோது திருமங்கை வேலை செய்த ஓட்டலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது இருவருக்குமிடையே முறையற்ற உறவு ஏற்பட்டிருக்கிறது.
வயதை காரணம் காட்டி தனபாலை திருமணம் செய்ய மறுத்த திருமங்கை, உடன் பணிபுரிந்த ரமேஷை கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்திருக்கிறார்.
இருப்பினும் தனபாலுடனான உறவை துண்டிக்க மனமின்றி, திருமணத்துக்குப் பிறகும் அவ்வப்போது அவனுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் நாமக்கலிலுள்ள தனபாலின் அறையில் அவனோடு தனிமையை கழித்துள்ளார்.
அப்போது திருமங்கையின் கையில் “ஆடம்ஸ்” என பச்சை குத்தியிருந்ததைப் பார்த்த தனபால், அது யாரென்று கேட்டுள்ளான். அது தனது கணவரின் மற்றொரு பெயர் என திருமங்கை கூறியதை நம்பாமல், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். வாக்குவாதம் முற்றி திருமங்கையின் கைகளைக் கட்டியும், வாயில் துணியை வைத்து அடைத்தும், கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை தனபால் ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.
பின்னர் ஊருக்குச் செல்வதாகக் கூறி நண்பனின் காரை வாங்கி, அதில் உடலை ஏற்றிக் கொண்டுவந்து மூலனூர் பகுதியில் சாலையோரம் வீசிச் சென்றுள்ளான் தனபால்.
தனபாலை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல், 2012ம் ஆண்டு நெல்லை அருகே கூட்டுப்பாலியல் கொடுமை செய்து பெண் கொன்று புதைக்கப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்தவன் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளான். புதைத்த இடத்தில் இருந்து பெண்ணின் எலும்புகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
நெல்லை டவுனைச் சேர்ந்த மணிகண்டன், ராமையன்பட்டியைச் சேர்ந்த ஆசீர்செல்வம் ஆகியோரை கொலை மிரட்டல் தொடர்பான வழக்கில் கடந்த 5ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, வேறொரு சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இவ்விருவரும் சேரன்மாதேவியைச் சேர்ந்த சிவகுமார் என்பவனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
நெல்லை சந்திப்பு பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தவன் சிவக்குமார். ஏற்கனவே திருமணமான சிவகுமாருக்கு, கணவரைப் பிரிந்து பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் பெண்ணான புஷ்பா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமலேயே அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளான் சிவக்குமார்.
ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்யும்படி புஷ்பா வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட சிவகுமார் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. புஷ்பா மயக்கம் அடைந்த நிலையில், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இரவு நேரத்தில் உடலை தச்சநல்லூர் வாசுடையார் சாஸ்தா கோவில் அருகே உள்ள பகுதியில் குழிதோண்டி புதைத்து விட்டு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பின் சிவகுமார் மும்பைக்கு சென்று வேலைசெய்து வருவதுடன் அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மணிகண்டன், ஆசிர் செல்வம் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவனை நெல்லைக்கு அழைத்து வந்த போலீசார், படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
சிவகுமார் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் பிணத்தை புதைத்ததாக கூறப்படும் இடத்தில், நெல்லை வட்டாட்சியர், அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஆகியோர் முன்னிலையில் தோண்டும் பணி 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. அதன் பயனாக ஓரிடத்தில் இருந்து எலும்புத் துண்டுகளும் புஷ்பா அணிந்திருந்த ஆடை கிழிந்த பகுதிகளும் கிடைத்தன.
இதனையடுத்து சிவக்குமாரிடம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ள போலீசார், புஷ்பாவின் முழு பின்னணி குறித்த விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
- முத்துப்பாண்டி, நீதிராஜபாண்டியன்