கொரோனா : ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை
கொரோனாவைரஸ் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்என்று கூறுகிறது. கொரோனா பிரச்சனை எப்போதுமுடியும் என்றும் அறுதியிட்டு சொல்லமுடியாது என்று கூறியுள்ளது. மேற்குஐரோப்பிய நாடுகளில் ஓரளவு குறைந்து வருவதாகவும்தற்போது ஆப்ரிக்க, தென் அமெரிக்க, கிழக்குஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது.
ஐநா பொதுச் செயலாளரும் இதனால் ஏற்படும் நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்கள் நடக்கின்றது என காணொளியில் பேசினார். இந்த தலைமுறை கண்டிராத பெரும் நெருக்கடியை இந்த உலகம் சந்திக்கிறது என்றும் மனித நேயம் குறைந்துக் கொண்டு வருகின்றது என தன் கவலையை ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியா குட்டரஸ் வேதனையோடு பேசினார். IMFம் பொருளாதாரம் உலகம் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளது. உணவுப் பொருட்களும் மருத்துவ சேவைகளுக்கு எந்தக் குறையும் நிகழ்ந்து விடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது. அறிகுறி இல்லாமலே கொரோனா பரவுவதும் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து அன்புக்குரிய மொழிபெயர்ப்பு படைப்பாளி திருமதி நாகேஸ்வரி அண்ணாமலைஅவர்கள் அனுப்பிய செய்தி வருமாறு…
கோவிட்-19 வைரஸ் மனித இனத்தை முற்றுகையிட வந்தாலும் வந்தது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மக்களின் தினசரி வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த ஜீவராசி அணுவிலும் பாதிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; இருந்தாலும் மனிதனை எத்தனை கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
சீனாவின் வுஹான் என்னும் இடத்தில் முதலில் தோன்றிய இதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வுஹான் வைரஸ் என்று அழைக்கிறார்; சீனா வைரஸ் என்றும் கூறுகிறார். சீனாதான் இதை அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் கொடுத்திருக்கிறது என்கிறார். சீன அதிபதி ஷியோ இது சீனாவுக்கு வந்த அமெரிக்க விளையாட்டு வீரர்கள் இதைச் சீனாவுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் என்கிறார். இந்தச் சண்டை ஒரு புறம் இருக்க இது உலகம் முழுவதும் கோவிட்-19 என்று அழைக்கப்படுகிறது. தோன்றிய சில மாதங்களிலேயே இது உலகம் முழுவதும் இருபது லட்சம் மக்களைப் பாதித்திருக்கிறது; ஒரு லட்சத்துப் பதினேழாயிரம் பேர்களின் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவில்தான் இதனால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இறப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது. உலக ஜனத்தொகையில் ஐந்தே சதவிகிதம் மக்கள் வாழும் அமெரிக்காவில் உலக இறப்புக்களில் பத்து சதவிகிதம் நேர்ந்திருக்கிறது. இது ஏன் என்று விளக்காமலும், இந்த நிலையை சீர்திருத்துவதில் கவனம் செலுத்தாமலும் எப்போதும்போல் ட்ரம்ப் யாரையாவது குறை சொல்வதில் குறியாக இருக்கிறார்; எப்போதும்போல் தினம் தினம் பொய்களாகக் கூறிவருகிறார்.
நோய்த் தடுப்பு மையத்தின் தலைவர் அமெரிக்க மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இல்லாமல் இருக்க வேண்டும், அத்தியாவசியமான தேவைகளுக்குத் தவிர வெளியே எங்கும் போகக் கூடாது என்று கூறிய யோசனைகளையெல்லாம் முதலில் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்த ட்ரம்ப் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்குள் நிலைமை மிஞ்சிவிட்டது. இறப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. வைரஸ் பற்றித் தான் முதலிலேயே எச்சரித்ததாகப் பொய் சொல்கிறார். பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசாத ட்ரம்ப்புக்கு உலக மகா புளுகன் என்ற பட்டம் கொடுக்கலாம்.
அமெரிக்கப்பொருளாதாரம் மிகவும் கீழே போய்விட்டதாம். அதைத்தூக்கி நிறுத்துவதற்கு இப்போது மூடப்பட்டிருக்கும் வணிகநிறுவனங்களைத் திறக்க வேண்டும் என்கிறார். வைரஸின்தாக்கத்தை நிறுத்துவதற்குத் தவறிவிட்ட ட்ரம்ப் இப்போதாவது அதன்தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிக்கலாம். அதற்குப் பதில் சீக்கிரமே கடைகளையெல்லாம்திறக்க வேண்டும் என்கிறார்.
அமெரிக்காவில்மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு.அவற்றைப் பயன்படுத்திச் சில மாநிலங்கள் பொதுஇடங்களை மக்களின் உபயோகத்திற்கு இப்போதைக்கு விடப் போவதில்லை என்றுமுடிவுசெய்திருக்கின்றன. அந்தமாநிலங்களிலுள்ள இவருடைய ஆதரவாளர்களை கடைகளைத்திறக்கும்படி கிளர்ச்சி செய்யும்படி தூண்டிவிடுகிறார். மக்களின்வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பினால்வைரஸின் பாதிப்பு இன்னும் கூடலாம் என்றுசுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வதையெல்லாம் ட்ரம்ப் கேட்பதில்லை. இவரை சமூகத்துக்கு எதிரான பபூன் (Sociopath and buffoon) என்கிறார் அரசியல் விமர்சகரும் மொழியியல்ஆளுமையுமான சாம்ஸ்கி. எல்லோரும்கோவிட்-19 என்று குறிப்பிடும் இந்தவைரஸை ட்ரம்ப் சீன வைரஸ்என்று குறிப்பிடுவதால் சீனர்களுக்கு எதிரான வன்மம் அமெரிக்காவில்கூடியிருக்கிறது என்கிறார்கள். இப்படிப்பட்ட ட்ரம்ப்பை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னும் என்னென்ன பலன்கள்அனுபவிக்கப் போகிறார்களோ அமெரிக்க மக்கள்.
உணவுப் பொருள்கள் வாங்கக் கடைக்குச் சென்றிருந்தோம். எங்களைப் போன்ற வயதானவர்கள் எங்கும் வெளியில் போகக் கூடாது, உணவுப் பொருள்களைக்கூட கடைக்காரர்களைக் கொண்டுவந்து கொடுக்கச் சொல்லலாம் என்று பலர் கூறுகிறார்கள். இரண்டு தடவை அப்படிச் செய்தபோது பொருள்களுக்கு அதிக விலை வாங்கியதோடு நாங்கள் கேட்காத சாமான்களைக் கேட்ட சாமான்களுக்குப் பதிலாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதனால் நாங்களே நேரில் போவதென்று முடிவுசெய்தோம். இது நாங்கள் வழக்கமாகப் போகும் கடைதான். இது மற்றக் கடைகளைப்போல் பெரிய சூப்பர் மார்க்கெட் அல்ல. காய்கறிகள், பழங்கள், பால், சீஸ், ரொட்டி வகைகள்தான் இங்கு அதிகமாகக் கிடைக்கும். இந்தக் கடை திறப்பது காலை 8 மணிக்கு. நாங்கள் 8:10-க்குச் சென்றபோது ஏற்கனவே பத்துப் பேர் கடைக்கு வெளியில் 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்தார்கள். கடைச்சிப்பந்தி ஒருவர் வாயிலின் அருகில் நின்றுகொண்டு உள்ளே செல்வோர்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார். ஒருவர் சாமான்களை வாங்கி முடித்து வெளியில் வரவும் இன்னொருவரை உள்ளே அனுப்பினார். இப்படிச் செய்ததால் கடைக்குள் நாலைந்து பேர்களே இருந்தனர். பில் போடுபவர்களும் இரண்டு பேர்தான் இருந்தனர். இதனால் ஒருவரிடமிருந்து இன்னொருவர் 6 அடி தூரம் நிற்க முடிந்தது. உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளில் வரிசை என்பது அமெரிக்கா இதுவரைக் கண்டிராத ஒன்று. வைரஸ் இதைச் சாதித்துவிட்டது.
வைரஸ் இரண்டாவது முறையாக 2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் இன்னும் அதிகத் தீவிரத்தோடு வரலாம் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். யாரையும், எந்த நாட்டையும் தண்டிக்கலாம், அடிக்கலாம் என்று நினைக்கும் அமெரிக்காவின் பாச்சா இந்த கோவிட்-19 வைரஸிடம் பலிக்கவில்லை. இது அமெரிக்காவை ஒரு உலுக்கு உலுக்கிவிடும்போல் தெரிகிறது. உலகையே பஸ்மமாக்கிவிடக் கூடிய அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் எக்கச்சக்கமாக இருக்கின்றன. ஆனால் கண்ணுக்கே தெரியாத இந்த வைரஸை ஒன்றும் செய்ய முடியவில்லையே.
– கே.எஸ். இராதாகிருஷ்ணன்