தமிழகம்

திருப்பூரில் ஓரங்கட்டப்படும் குண்டடம் ஊராட்சி

உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தாமல் காலம் கடத்தி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணிகளை அரசு அதிகாரிகளே கவனித்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் மக்களின் தேவைகளை அந்த அந்தப் பகுதிகளின் பிரச்சனைகளை அவர்கள் வகிக்கும் இடங்களுக்கே சென்று அவர்களின் தேவைகளை அறிந்து எந்த அதிகாரியும் நிறைவேற்றித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் புலம்புகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு தலைவர், ஒரு துணை தலைவர் ஏறக்குறைய பத்து வார்டு உறுப்பினர்கள் பார்த்த வேலைகளை ஒரு ஊராட்சி செயலாளரும், பத்து ஊராட்சிகளுக்கு ஒரு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் முப்பது முதல் அம்பது ஊராட்சிகளை ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரும் கவனித்து வருகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் மாவட்டத்தில் உள்ள எந்த ஊராட்சி பகுதிகளுக்கும் வருவதில்லை. மக்களின் தேவைகள் எதுவுமே நிறைவேற்றப் படாமல் பணிகள் தேங்கிக் கிடக்கின்றன. மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.


குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தைப் பொருத்தவரை பெரும்பாலான ஊராட்சி செயலாளர்கள் அலுவலகத்தில் இருப்பதே கிடையாது. அந்தந்த ஊர் பொதுமக்களே அவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. இவர்களை கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வியும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஏனென்றால் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வியே தனது அலுவலகத்தில் இருப்பதில்லை. இவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் மாவட்டத்தின் திட்ட இயக்குனர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தை கண்டுகொள்வதாக தெரியவில்லை.
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், ஒன்றிய பொதுநிதி, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிறதுறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டம் பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக ஆய்வு செய்ய வேண்டிய திட்ட இயக்குனர் ரமேஷ் ஊராக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகியோர் குண்டடம் ஊராட்சி பக்கமே வருவதில்லை. மேற்கண்ட பணிகள் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறுகிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.
திருப்பூர் மாவட்டம் முழுமைக்கும் திட்டஇயக்குனர் தான் ரமேஷ். ஆனால் இவர் குண்டடம், தாராபரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை புறக்கணித்து விட்டு பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், குடிமங்களம் ஆகிய ஒன்றியங்களில் மட்டுமே முகாமிட்டுள்ளார். அதன் ரகசியம் என்னவென்றே தெரியவில்லை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஊராட்சி செயலாளர்களிடமும் நாம் விசாரிக்கையில், “ நாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முன்கூட்டியே சொல்வதில்லை. கடைசி நேரத்தில் எங்களை அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா என்று வாட்டி வதைக்கிறார்கள். இதனால் நாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி மிகுந்த வேதனையில் இருக்கிறோம்” என்று வேதனையுடன் தங்கள் மனக்குமுறலை கூறுகின்றனர். இதற்கெல்லாம் காரணமான தான் தோன்றித்தனமாக சுற்றித்திரியும் பல வட்டார வளர்ச்சி அலுவலர்களும், மெத்தனமாக செயல்படும் ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் குற்றச்சாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா திட்ட இயக்குனர் ரமேஷ். காத்திருப்போம் நாமும்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button