அரசு ஆணையை மதிக்காத விஸ்வ சிஷ்ய வித்யோதயா பள்ளி…
நாட்டையே அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளது. அதில் ஒன்றுதான் தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் 2020&2021 ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தக்கூடாது என்பது.
இதனைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட செயல்பட்டுவரும் விஸ்வ சிஷ்ய வித்யோதயா (CBSE) பள்ளி கல்வி கட்டணம் கேட்டு பெற்றோர்களை வற்புறுத்துவது குறித்த பதிவு சமூகவலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் இந்த தகவல் அரசின் காதுகளுக்கும் எட்டியது. இதனைத் தொடர்ந்து அரசாங்கம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 144 தடை அமலில் இருக்கும்நிலையில் சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மாணவர்களின் பெற்றோரிடம் கட்டணத் தொகையை கட்டும்படி வலியுறுத்துவது அரசின் கவனத்துக்கு வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மீது தீவிரமாகபரிசீலித்து, 2020-21ம் கல்வி ஆண்டுக்கான கட்டணத் தொகை, 2019-20ம் கல்வி ஆண்டுக்கானகட்டண பாக்கி அல்லது ஏதேனும் தாமதத்துக்காக கட்ட வேண்டிய அபராதத்தை கட்டும்படி மாணவர்களையோ,பெற்றோர்களையோ நிர்பந்திக்க கூடாதென தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அரசு உத்தரவிடுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியானது பிரபல நாளேடுக்கும் சென்றடைந்தது. ஆனால் அந்த நாளிதழில் செய்தி வெளியிடப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் அந்த நாளிதழில் விளம்பரம் ஏஜென்ட் மூர்த்தி என கூறப்படுகிறது.
பொள்ளாச்சி பல்லடம் சாலை நந்தனார் காலனியில் வசித்து வரும் மூர்த்தி விளம்பர ஏஜென்ட். இவரது மனைவி பி.ஏ கல்லூரியில் விரிவுரையாளர். இவரது பிள்ளைகள் அதே விஷ்வ சிஷ்ய வித்யோதயா பள்ளியில் பயின்று வருவதாகவும் பள்ளியை குறித்த இந்த செய்தி குறிப்பிட்ட நாளிதழுக்கு வந்ததாகவும் அதனை மூர்த்திதான் தடுத்து நிறுத்தியதாகவும் அதற்கு பிரதிபலனாக பள்ளி நிர்வாகத்திடம் இருந்து சில சலுகைகள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு குரல் பதிவில் ரூபாய் அரை கோடியை ஆசிரியர்களுக்கு சம்பளமாக வழங்க இருப்பதால் பெற்றோர்களிடம் பள்ளி கட்டணத்தை செலுத்துமாறு கேட்டோம் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
மேலும் நமக்கு கிடைத்த தகவலின்படி மேற்கண்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு முதலே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாராயண குழுமத்துடன் இணைந்து நீட் பயிற்சி அளிப்பதாகவும் அதற்கு கூடுதல் கட்டணமாக ரூபாய் 25,000 வருடா வருடம் வசூலித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
பள்ளி கல்வி பயிலும் அனைவரும் மருத்துவ படிப்பிற்கு தான் செல்வார்கள் என்ற எந்த ஒரு உறுதியும் இல்லாத நிலையில் ஏழாம் வகுப்பு முதல் கட்டாய நீட் தேர்வு பயிற்சி என்று 25,000 ரூபாய் பள்ளி நிர்வாகம் கொள்ளையடிப்பது எந்த வகையில் நியாயம். இந்த பிரச்சினை கிளம்பியதும் அந்த பயிற்சி கட்டாயம் இல்லை என்றும் மொத்த கட்டணத்தில் இருந்து ரூபாய் 10 ஆயிரத்தை மட்டும் குறைத்துக்கொண்டு விதிவிலக்கு என்றும் கூறுகிறது பள்ளி நிர்வாகம். இந்தப் பள்ளியானது சாந்தா காலிங்கராயர் என்பவரால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய வித்யா மந்திர் என்ற பள்ளியை பொள்ளாச்சி பகுதியில் நடத்திவருகிறார்.
உணவுக்கே கஷ்டப்படும் இப்படி ஒரு சூழ்நிலையில் கல்வி கட்டணத்தை பெயரளவில் குறைத்துக்கொண்டு கட்டண குறைப்பு என்று அந்தத் தொகையை உடனே கட்ட நிர்பந்திப்பது மனிதாபிமானமற்ற செயல். உயிர் வாழ்வதே கடினம் என்ற சூழ்நிலையில் எங்கிருந்து செலுத்தமுடியும் கல்வி கட்டணத்தை காற்றில் பறக்க விட்ட காகிதம் ஆகிவிட்டதா அரசு ஆணை. இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
– முத்துப்பாண்டி