மணல் கொள்ளையும் காவல்துறையினரும்
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்த தத்தங்குடி கண்மாயில் நடக்கும் மணல் கொள்ளைக்கு மூன்று லோடுக்கு இருபதாயிரம் ரூபாய் என வசூல் செய்யும் இன்ஸ்பெக்டர் முகமது நசீர் வசூல் செய்தார் என்று புகார் எழுந்தது.
மணல் கடத்தல்காரர்களுடன் ஒப்பந்தமிட்டு காவல்ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் இன்ஸ்பெக்டரின் ஆடியோ விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார் மாவட்ட எஸ்பி ஓம்பிராகாஷ் மீரா.
இது குறித்து இராமநாதபுரம் சர்ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்து அந்தப் பகுதியில் மணல் கொள்ளை நடப்பதை உறுதி செய்தார். இதையடுத்து சாயல்குடி காவல்ஆய்வாளர் ஜோக்கிம் ஜெர்ரி மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கீரந்தை கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, கண்ணன், பூப்பாண்டி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தார். கடந்த 23ஆம் தேதி சிக்கல் காவல் ஆய்வாளர் முகமது நசீர் ohp பம்ப் ஆப்பரேட்டர் காளி என்பவருடன் திருட்டு மணல் அள்ளும் நபர்களுடன் லஞ்சம் கேட்டு பேசிய குரல் பதிவு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விசாரணை நடத்த வந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆய்வாளர் குறித்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி அவரை பணி இடைநீக்கம் செய்து இராமநாதபுரம் சரக டிஐஜி காமினி உத்தரவிட்டார். இதுகுறித்து ஆய்வாளர் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் காவல்ஆய்வாளர் நசீர் லஞ்சம் கேட்டு பேசிய ஆடியோ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தவர் வீட்டிற்குச் சென்றார் சாயல்குடி காவல்ஆய்வாளர் ஜோக்கப் ஜெரி. அங்கு நிறுத்தப்பட்ட டிராக்டரில் மண் இருந்ததால் டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றார். இதனால் டிராக்டர் உரிமையாளரின் மனைவிக்கும் ஆய்வாளர் ஜோக்கப்பிற்கம் வாக்குவாதாம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் டிராக்டரை மணல்கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறி பறிமுதல் செய்ய வந்த காவல்ஆய்வாளர் ஜோக்கிம் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அவர் வாயாலேயே காவல்ஆய்வாளர் முகமது நசீர் மீது புகார் அளித்ததற்கு பழிவாங்கும் விதமாக டிராக்டரை பறிமுதல் செய்ததை ஒப்புக் கொண்டார்.
இயற்கை வளங்களை சூறையாடும் மணல் கொள்ளையர்களும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சாமானியர்களின் ஆதங்கமாக உள்ளது.