குட்கா ஊழல் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால் போலீஸ் அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. செங்குன்றத்தில் குட்கா குடோன் நடத்தி வந்த மாதவராவ், தனது பங்கு தாரர்களான சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருடன் சேர்ந்து அதிகாரிகளை பணத்தால் வளைத்துப் போட்டு குட்கா வியாபாரத்தை தங்கு தடையின்றி மேற்கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு பிறகே குட்கா விவகாரம் சூடு பிடித்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் குட்கா ஊழலில் அடிபட்டதால் தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி தங்களது அதிரடியை தொடங்கினர். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் குட்கா வியாபாரியான மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரியான பாண்டியனும் சிக்கினர். இவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் பல்வேறு தகவல்களை முக்கிய ஆதாரங்களாக சி.பி.ஐ. திரட்டியுள்ளது. குட்கா ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதவராவை, செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார் அவரது வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசு துறை அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் சி.பி.ஐ. அடுத்த கட்டமாக போலீஸ் அதிகாரிகளுக்கு குறி வைத்துள்ளனர்.
புழலில் உதவி கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோருக்கு குட்கா ஊழலில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சம்மனை ஏற்று 2 பேரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விரைவில் ஆஜராக உள்ளனர்.
அப்போது அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழலில் உயர் போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின்போது மன்னர் மன்னனும், சம்பத்தும் அளிக்க உள்ள வாக்குமூலம் குட்கா விவகாரத்தில் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இருவரிடமும் நடத்தப்பட உள்ள விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குட்கா ஊழல் வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. இதனால் போலீஸ் அதிகாரிகள் மீதான பிடி இறுகியுள்ளது.
குட்கா ஊழலில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பெயரும் பலமாக அடிபட்டது. இதுபற்றி விளக்கம் அளித்த அவர், குட்கா ஊழல் நடந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார். அதே நேரத்தில்தான் யாரிடமும் லஞ்சம் வாங்க வில்லை. எனது பெயரை சொல்லி யாராவது வாங்கி இருக்கலாம்? என்று தெரிவித்துள்ளார். இதனையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர். ஜார்ஜின் குற்றச்சாட்டு குறித்தும், மன்னர்மன்னன், சம்பத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் ஜார்ஜ் அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் பலர் எனக்கு துரோகம் செய்து விட்டனர் என்றும் கூறி இருந்தார். அவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குட்கா ஊழல் நடைபெற்ற காலகட்டத்தில் 4 போலீஸ் கமிஷனர்கள் பணியில் இருந்துள்ளனர். இதேபோல இணை ஆணையர்கள், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கும் குட்கா ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்கிற குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது.
இதன் உண்மைதன்மை குறித்தும் சி.பி.ஐ. வசாரித்து வருகிறது. குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரி கள் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகி வருகிறார்கள்.
போலீஸ் அதிகாரிகளான மன்னர்மன்னன், சம்பத் ஆகியோருக்கு முதலில் குறி வைத்துள்ள சி.பி.ஐ. படிப்படியாக மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளது.
இதனால் குட்கா ஊழலில் சி.பி.ஐ. விரித்துள்ள வலையில் அடுத்து சிக்கப் போவது யார்-யார்? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
குட்கா வழக்கில் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் கைது செய்து விட்டு மேல் மட்டத்தில் இருப்பவர்களை விட்டு விடக்கூடாது என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் இந்த விஷயத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கவனமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கு எதிராகவும் வலுவான ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். எனவே எந்த நேரத்திலும் குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.