பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் : முதலமைச்சர்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், இளந்திரையன் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த வழக்குதாரர்கள் தற்போது வரை சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் சென்று சங்ககிரி நீதிமன்றத்தை நாட வேண்டி இருந்தது. புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டதன் மூலம் வழக்கு தாரர்கள் பயன் அடைகின்றனர்.
புதிய நீதிமன்றம் செயல்பட தொடங்கிய பின்னர் ஏற்கனவே உள்ள 50 சதவீத வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 8 ஆண்டுகளில் நீதித்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் விரைவாக நீதி கிடைத்திட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வழக்கறிஞர் சங்கங்கள் சேவை மனப்பான்மையுடன் முன்வந்து பொது மக்களுக்கு உதவ வேண்டும் மற்றும் அவர் கேட்டுக்கொண்டார்.