விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் டைல்ஸ் கற்கள் ! பரமக்குடி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தின் அவலம் !

பரமக்குடியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் தரம் இன்றி கட்டப்பட்டதால் டைல்ஸ்கள் பெயர்ந்து விவசாயிகளின் பாதங்களை பதம் பார்த்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் அலுவலக வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக இருந்தபோது 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூபாய் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இரண்டு தளங்களுடன் அனைத்து வசதிகளுடன் வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டது.

இந்நிலையில் அலுவலக நுழைவாயில் பகுதியில் உள்ள தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுவதால் அலுவலகத்திற்க்கு வரும் விவசாயிகள் மற்றும் ஊழியர்களின் கால்களில் அடிக்கடி காயம் ஏற்படுகிறது. அதேபோல் கட்டிடத்தின் தூண்கள் மற்றும் சுற்றுச்சூவரில் சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து கம்பிகள் மட்டும் உள்ளதால் அச்ச பயத்துடன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் அலுவலக நுழைவாயில், உதவி வேளாண் அலுவலர் அறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. டைல்ஸ் கற்கள் பெயர்ந்து உடைந்து காணப்படுவதுடன் கழிப்பறைகளின் கதவுகள் உடைந்து சேதம் அடைந்து பயன்பாடுன்றி உள்ளது. சேதம் அடைந்த டைல்ஸ் கற்களை மாற்றி தரை தளத்தை சீரமைக்க கோரி வேளாண் துறை அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் குறுகிய காலத்தில் தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ்கள் பெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. பரமக்குடி வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் டைல்ஸ்கள் சேதம் அடைந்து உள்ளதை சீரமைக்க வேண்டுமென வேளாண்மை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.