அதிமுகவுக்கு தன்னையே அர்பணித்த ஜெ.கே.ரிதீஸூக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி..!
இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகருமான ஜெ.கே.ரிதீஸ் என்ற சிவக்குமார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இராமநாதபுரத்தில் அவரது இல்லத்தில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஜெ.கே.ரிதீஸ் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு தனது பதவி முடியும் தருவாயில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பிறகு அதிமுகவின் வளர்ச்சிக்காக தன்னை அர்பணித்துக் கொண்டு கட்சிப் பணியாற்றினார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தொகுதியின் தேர்தல் பொருப்பாளராக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம், உதயகுமார், இரவீந்திரநாத் மூன்றுபேரும் ஜெ.கே.ரிதீஸ் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருமாறு பலமுறை கேட்டுக்கொண்டதற்கிணங்க நடிகர் ஜெ.கே.ரிதீஸூம் தேனி பாராளுமன்ற தொகுதி முழுவதும் பன்னீர் செல்வத்தின் மகனின் வெற்றிக்காக ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்தார். அதன்பிறகு இராமநாதபுரம் தனது சொந்த மாவட்டம் என்பதாலும் தனது சட்டமன்ற தொகுதியான பரமக்குடி சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடந்ததாலும் அங்கு பிரச்சாரத்திற்குச் சென்றார். இராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்து தினசரி பிரச்சார பணிகளை மேற்கொண்டார்.
பரமக்குடிசட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்குரிதீஸின் உழைப்பும் ஒரு காரணம் என்கிறார்கள்அதிமுகவினர். எப்போதுமே திமுகவிற்கு சாதகமான நயினார் கோவில்,போகலூர் ஆகிய இரண்டு யூனியன்களிலும்ரிதீஸின் உழைப்பே அதிமுகவிற்கு அதிகவாக்குகளை பெற்றுத்தந்தது என்று பெருமையுடன் கூறுகிறார்கள்இரண்டு யூனியனைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்களும்..
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு நயினார் நாகேந்திரனை ஆதரித்து மோடி பிரச்சாரத்திற்கு வந்ததால் அன்றைய தினம் தனது வீட்டிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார்.
இறப்பதற்கு முன் இவர் தேர்தல் பணியாற்றிய இரண்டு தொகுதிகளும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளும் திமுக கூட்டணி வசம் சென்றாலும் இவர் தேர்தல் பணியாற்றிய தேனி அதிமுக வசம் வந்தது. அதேபோல் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் இவர் தேர்தல் பணியாற்றிய இரண்டு ஒன்றியங்கள் தான் அதிமுகவின் வெற்றிக்கு உதவியது. பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதால் தான் இன்றைய எடப்பாடி ஆட்சியே தப்பியது என்பது அனைவரும் அறிந்ததே. இவர் அதிமுகவிற்காக உழைத்து தனது உயிரையே அர்பணித்திருக்கிறார். இவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்த பன்னீர் செல்வமோ, உதயகுமாரோ, அதிமுக அமைச்சர்கள் யாருமே இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. திமுகவை சேர்ந்தவர்கள்தான் ஏராளமானவர்கள் இவரது ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
அவர் இறந்து ஓர் ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அவரது சொந்த ஊரான மணக்குடி கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்த இடத்தில் அவருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி அனுசரிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி, பரமக்குடி சட்டமுன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், நயினார் கோயில் ஒன்றிய பெருந்தலைவர் வனிதா குப்புசாமி, பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, அம்மா சரவணன் மற்றும் ஏராளமான அதிமுகவினரும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
– உதுமான்அலி