சசிகலா கடந்து வந்த பாதை…
தமிழக அரசியலில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதா, சசிகலா பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை. சரியோ,தவறோ இவர்கள் இருவரையும் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும். “நம்ம ஆத்துப் பெண் முதல்வராக இருக்கும்போது நம்மவாள்” யாரையும் அருகில் செல்லவிடாமல் நடராஜன் குடும்பம் தடுத்து விடுகிறதே என்கிற கோபம் பலரிடம் இருந்ததாக தெரிகிறது.
ஜெயலலிதா முதல்வரானவுடன் சசிகலா ஜெயலலிதாவுடன் வந்து சேரவில்லை. ஜெயலலிதா அரசியலில் கால்பதிக்கும் போதே அவருடன் இணைந்தவர் சசிகலா. அப்போது ஜெயலலிதா இவ்வளவு பெரிய உயரத்தைத் தொடுவார். கலைஞர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வார் என்றெல்லாம் யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் தான் ஜெயலலிதா, சசிகலா உடனான நட்பு உருவானது.
எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டார். அந்த நேரத்தில் சசிகலாவும் மன்னார்குடி குடும்பத்தினரும் தான் ஜெயலலிதாவிற்கு துணையாகவும், ஆறுதலாகவும் இருந்தார்கள். எம்ஜிஆரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராமாவரம் இல்லத்திற்குள் மன்னார்குடி குடும்பத்தினர் தான் ஜெயலலிதாவை காரில் அழைத்துச் சென்று எம்ஜிஆரின் உடல் அருகே அமர வைத்தனர். அப்போது ஜெயலலிதாவுடன் அமர்ந்திருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவை அந்த இடத்திலிருந்து விரட்டுவதற்காக சுலக்ஷணா சம்பத் உள்ளிட்ட பெண்கள் ஊக்கை வைத்து ஜெயலலிதாவின் பின்புறம் குத்தி காயப்படுத்தி விரட்ட முயன்ற போது சசிகலா தான் ஜெயலலிதாவை அந்த இடத்திலேயே இருப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.
அதன்பிறகு இராணுவ வாகனத்தில் இருந்து ஜெயலலிதா தள்ளிவிடப்பட்ட போதும் அவருக்கு துணையாக இருந்து ஆறுதல் கூறியவர் சசிகலாதான். அதன்பிறகு ஜானகி குடும்பத்தினர் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்தார்கள். அந்த சமயத்தில் நடராஜன் கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் தனது கவனத்தைச் செலுத்தினார். ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஆக்குவதற்காக இரவோடு இரவாக எஸ்டி சோமசுந்தரம், அரங்கநாயகம், திருநாவுக்கரசர் போன்றோரைச் சந்தித்து கட்சியின் பொதுச்செயலாளராக (ஜெயலலிதாவை) ஆக்கினார். அதன்பிறகு சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அரணாக போயஸ்கார்டன் இல்லத்திலேயே தங்கினார்கள்.
1991ல் ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறார். அந்த சமயத்தில் சசிகலா ஜெயலலிதாவுடன் தங்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளால் தவறாக பேசப்பட்டதால் நடராஜன் அந்த சமயத்தில் வெளியில்தான் தங்கியிருந்தார். அப்போது நடராஜனின் தாயார் தனது மகனையும் மருமகளையும் ஒரே இடத்தில் தங்க வைத்து தனிக்குடித்தனம் நடத்த வைத்துவிட்டு தனது ஊருக்கே செல்லலாம் என முடிவெடுத்து சசிகலாவை அழைப்பதற்காக போயஸ் கார்டன் இல்லத்திற்குச் செல்கிறார். சசிகலாவின் மாமியாரைப் பார்த்ததும் முதலமைச்சரான ஜெயலலிதா பதட்டமடைந்திருக்கிறார்.
சசிகலாவா முதலமைச்சர் பதவியா? என்றால் சசிகலாதான் என்று சொல்கிற இடத்தில் அப்போது ஜெயலலிதா இருந்திருக்கிறார். இதை நடராஜன் ஒரு பேட்டியில் எனது தாயாரிடம் ஜெயலலிதா விலை உயர்ந்த தங்கம், வைரம் அனைத்தையும் கொடுத்து இதையெல்லாம் எடுத்துச் செல்லுங்கள். சசியை என்னிடம் விட்டுச் செல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அந்தளவிற்கு அவர்கள் இருவருக்குமான உறவு இருந்தது என்று கூறியிருக்கிறார்.
நடராஜன், திவாகரன், தினகரன் ஆகியோர் மீதெல்லாம் ஜெயலலிதா சந்தேகப்பட்டார். ஆனால் சசிகலாவை மட்டும் கண்மூடித்தனமாக நம்பினார்.
ஏனெனில் 1991 -& 1996 காலகட்டத்திற்கு பிறகு பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது போடப்பட்டது. அந்த வழக்குகளில் சசிகலாவை ஜெயலலிதாவிற்கு எதிராக கொண்டுவர காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர். சிறைச் சாலைக்குச் சென்றார். மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது எந்த இடத்திலும் ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இது ஜெயலலிதாவை நெகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. அதன்பிறகு சசிகலாவை என் தாய்க்கு நிகரானவர் என்று ஜெயலலிதா கூறினார். ஒருமுறை சசிகலாவை சட்டமன்றத்திற்குள்ளேயே அழைத்து வந்தார். திமுகவினர் சட்டமன்ற விதிகளை காட்டி உறுப்பினராக இல்லாத ஒருவரை எப்படி சட்டசபைக்குள் அழைத்து வரலாம் என்று கேட்க உடனே ஜெயலலிதா திமுகவினரை பார்த்து நான் நினைத்தால் சசிகலாவை ஒரு நொடியில் அமைச்சராக்குவேன் என்று சவால் விட்டார்.
2001 -& 2006 காலகட்டத்தில் சசிகலா குடும்பத்தினரின் பேச்சை மீறி சில முடிவுகளை எடுத்தார். அந்த காலகட்டத்தில் அரசு நிர்வாகத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரின் தலையீடு அதிகமாக இருந்தது. அதிமுக தனது கொள்கைக்கு முரணான முடிவுகளை அப்போது எடுத்தது. கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடைச்சட்டம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம், அரசு ஊழியர்களை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இலவச மின்சாரத்திற்கு புதிய மாற்றத்தை கொண்டு வந்தார்.
இதனால் மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்தது. அரசு ஊழியர்கள் பிரச்சனை பற்றி சங்கராச்சாரியாரிடம் பேசும் போது நான் அதுபற்றி பேசி நல்ல முடிவை கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது திமுக தலைவர் கருணாநிதி ‘சங்கராச்சாரியார் என்ன அரசாங்கத்தில் இருக்கிறாரா? அரசின் கொள்கை முடிவுகளை இவர் எப்படி எடுக்க முடியும்?’ என்ற கேள்வி எழுப்பினார். அதன்பிறகு 2004&ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது அதிமுக. அதன்பிறகு தான் நடராஜன் ஜெயலலிதாவிடம் தாங்கள் எடுத்த தவறான முடிவுகள் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார்.
அதன்பிறகு தான் சங்கராச்சாரியார் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு சசிகலா குடும்பத்தினரோடு இயல்பு நிலைக்கு வருகிறார். பிறகுதான் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததுமே வாஜ்பாய், அத்வானி, சோ, குருமூர்த்தி ஆகியோர் சங்கராச்சாரியாரை எப்படி கைது செய்யலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் மறுபுறம் திராவிடக் கட்சிகள் ஜெயலலிதாவை பாராட்டினார்கள். இதற்கு பின்னணியில் நடராஜன் இருக்கிறார். சசிகலா குடும்பத்தினர்கள் தான் சங்கராச்சாரியார் கைதுக்கு காரணம் என சிலர் கோபப்படுகிறார்கள். அந்த வழக்கில் குருமூர்த்தியின் பெயர் சேர்க்கப்படுகிறது.
குருமூர்த்தியை காவல்துறை கைது செய்து தனி இடத்தில் விசாரணை செய்கிறார்கள். குருமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் என்னை விசாரணை செய்த வீடியோவை காவல்துறை என்னிடம் வழங்கவில்லை என வழக்கு தாக்கல் செய்கிறார். இதற்கு காவல்துறை அதிகாரிகள் குருமூர்த்தி வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார். இவரை கைது செய்ய வேண்டும். இவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். குருமூர்த்தி அப்போது தலைமறைவானார். உயர்நீதிமன்றம் குருமூர்த்தியை கைது செய்ய உத்தரவிட்டது. இந்த சம்பவம் தான் குருமூர்த்தி சசிகலா குடும்பத்தினர் மீது தீராத பகை கொள்ள காரணமாக அமைந்தது.
தொடரும்..