தமிழகம்

இளமதி எங்கே? சாதி மறுப்பு காதல் திருமணத்தில் திடீர் திருப்பம்…

ஈரோடு மாவட்டம் பவானி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பழனிசாமி மகன் செல்வன்(26), குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் இளமதி (23) ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். செல்வன் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினராக இருப்பதால் அந்த அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி திருமணம் நடத்தி வைக்க கேட்டுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் சேலத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் கடந்த 9ம் தேதி காலை 11:00 மணியளவில் சுயமரியாதை திருமணம் நடந்துள்ளது. பின்னர் அதே பகுதியில் உள்ள ஈஸ்வரன் வீட்டில் செல்வனும் இளமதியம் மாலை 5 மணி வரை இருந்துள்ளனர். பிறகு செல்வனின் நண்பரான சரவண பரத் என்பவரை சந்திப்பதற்காக அங்கிருந்து இளமதியும், செல்வனும் சென்று விட்டார்கள்.

இந்த நிலையில் இரவு 8:30 மணி அளவில் 4 ஆம்னி கார், ஒரு பொலேரோ, ஒரு இன்டிகா மற்றும் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 50 பேர் ஈஸ்வரனை தாக்கி அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றுள்ளனர். காரில் செல்லும்போது, செல்வனும் இளமதியம் எங்கே என கேட்டு ஈஸ்வரனை மேலும் கடுமையாக தாக்கி, செல்போனையும் பறித்துகொண்டுள்ளனர்.

அதே போல் இளமதியும் செல்வனும், அவருடைய நண்பர் சரவணபரத் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கொளத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அவ்வழியே அந்த சிலர் அவர்களை வழிமறித்து கடுமையாகத் தாக்கி இளமதியை ஒரு காரிலும், செல்வனை ஒரு காரிலும் ஏற்றிக்கொண்டு, சரவணபரத்தை தாக்கி அவருடைய இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

ஈஸ்வரன் கடத்தப்பட்டது குறித்து, காவலாண்டியூர் பகுதியைச் சார்ந்தவர்கள் உடனடியாக கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து, அங்கிருந்த காவலாண்டியூர் ஈஸ்வரன் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கார்களில் பா.ம.க கொடி மற்றும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கொளத்தூர் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நல்லிரவு 12 மணி அளவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொடி கட்டப்பட்ட ஒரு ஆம்னி காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இளமதியின்தந்தை, கொங்குநாடு மக்கள் கட்சியின் பவானி ஒன்றிய செயலாளர் என்பதும், இளமதியும் செல்வனும்வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், கலப்புத் திருமணத்தை ஏற்கமுடியாமல் அவர்களைபிரிப்பதற்காக கடத்தியதும் தெரியவந்தது.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஈஸ்வரன் மற்றும் செல்வனை, கொளத்தூர் அருகே கருங்கல்லூர் பகுதியிலுள்ள அரசு பள்ளி வளாகத்தில் இருந்து காவல் துறையினர் மீட்டு, அங்கு இவர்களை தாக்கிய சிலரையும் காவல் துறையினர் கொளத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர் பகுதியைச் சார்ந்த பா.ம.க பிரமுகர்கள் சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கடத்தப் பட்டதாக புகார் அளிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இளமதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது வழக்கறிஞருடன் ஆஜரானார். தற்போது முக்கிய திருப்பமாக இளமதியை திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடத்தியதாக பெண்ணின் தயார் அளித்த புகாரின் பேரில் கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இளமதி அவரது பெற்றோருடன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து இரு தரப்பினரிடமும் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்பு அடுத்த கட்ட தகவல் வெளிவரும்.

– ப.வேல்மணி, செந்தில்குமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button