வேதாரண்யத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இமானுவேல் சேகரனின் பிறந்தநாளுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியை கிழித்ததாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ராமகிருஷ்ணபுரம் பகுதிக்கு மற்றொரு சமூகத் தலைவர் வந்ததாலும் இருதரப்பு இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில், வேதாரண்யம் காவல்நிலைய சாலையில் காரில் சென்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மாவட்ட இளைஞரணித் தலைவர் பாண்டியன், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர்கள் மீது மோதியது.
இதனால் கைகலப்பு ஏற்பட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் வலது கால் வெட்டப்பட்டது. ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர், பாண்டியனின் காரை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர்.
காவல்நிலையம் எதிரிலேயே இந்த வன்முறை நடந்தபோதும், வேளாங்கண்ணிக்கு பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றுவிட்டதால் 2 பேர் மட்டுமே காவல்நிலையத்தில் இருந்துள்ளனர். அவர்கள் கலவரத்தை தடுக்க முயன்றபோது காவல்நிலையத்தின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இருந்த அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டது.
இதையடுத்து இருதரப்பும் வன்முறையில் ஈடுபட்டதால், திருச்சி மண்டல ஐ.ஜி வரதராஜுலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், நாகை எஸ்.பி ராஜசேகரன், திருவாரூர் எஸ்.பி துரை உள்ளிட்ட காவல் அதிகாரிகள் வேதாரண்யத்தில் முகாமிட்டனர்.
பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் விதமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 6 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலையை வரவழைத்து உடைக்கப்பட்ட இடத்திலேயே போலீசார் நிறுவினர். மேலும் அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் வேதாரண்யத்தில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதாக தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்தார்.
இந்தக் கலவரம் தொடர்பாக ஏற்கனவே 2 சமூகத்தை சேர்ந்த 28 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய பாண்டியன் உள்ளிட்ட 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் பாண்டியன் மற்றும் லெனின் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். லண்டன் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும், செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சிலையை உடைக்கும் போது வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- சரவணக்குமார்