தமிழகம்

காய்ச்சலுக்கு ரூ 64 ஆயிரம் பில்..! : அதிரவைத்த மருத்துவமனை…

சென்னை கொரட்டூர் ஆர்.பி.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி 64 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர்.

நோயாளியின் உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால் பில்லில் 15 ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

பார்ப்பதற்கு சினிமாசெட் போல காட்சி அளிக்கும் இதுதான் சென்னை கொரட்டூரில் உள்ள ஆர்.பி.எஸ் மருத்துவமனை..!மருத்துவர் ஆர்.பி.சண்முகத்தை சேர்மனாக கொண்ட ஆர்.பி.எஸ் மருத்துவமனைக்கு கடந்த 11ஆம்தேதி சரோஜா என்ற பெண்மணி காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்துபலவிதமான டெஸ்டுகளும் மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் தாக்கிஇருப்பதாகவும் உடனடியாக அவரை மடுத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறி ஐசியூக்குகொண்டு சென்றுள்ளனர்.

முன்பணமாக 15 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட கூறியுள்ளனர். அதன்படி சரோஜாவின் உறவினர், பணம் செலுத்தி உள்ளார். 6 மணி நேரம் மட்டுமே ஐசியூவில் இருந்த அந்த பெண், பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்னும் காய்ச்சல் சீராகவில்லை என்று கூறி மொத்தம் 3 தினங்கள் சிகிச்சை அளித்த நிலையில் அந்த பெண்மணி தனக்கு உடல் நலமாகிவிட்டது என கூறியதால் வேறு வழியில்லாமல் டிஸ்சார்ஜ் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். அப்போது இதுவரை மொத்தம் 64 ஆயிரத்து 713 ரூபாய் கட்டணம் என்று கூறியுள்ளனர்.

கையில் கொடுக்கப்பட்ட பில்லை பார்த்து மிரண்டு போயுள்ளனர் சரோஜாவின் உறவினர்கள். 100 ரூபாய் பதிவு கட்டணத்துடன் தொடங்கிய அந்த பில்லில் சிகிச்சையில் இருந்தவரை டிஸ்சார்ஜுக்கு முன்பாக சென்று சுற்றி பார்த்த 3 டாக்டர்களுக்கு மட்டும் மொத்தமாக 9 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது இல்லாமல் சாதாரன வார்டு நர்ஸுக்கு 1200 ரூபாய் என்றும் டியூட்டி டாக்டருக்கு 800 ரூபாய் என்றும் குறிப்பிட்டிருந்த பில்லில், ஐசியூ நர்ஸுக்கு 1500 ரூபாய் என்றும் டாக்டருக்கு 1500 ரூபாய் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நாளில் மருந்து வகைகளுக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிட்டு இருந்தனர். காய்ச்சலுக்கு எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுத்தவகையில் 9 ஆயிரத்து 890 ரூபாய் என குறிபீட்டு இருந்தனர். ஐசியூவில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன், கார்டியாக் மானிட்டர், போன்றவற்றிற்கு 18 ஆயிரத்து 400 ரூபாய் என பில்லில் குறிப்பிட்டு இருந்தனர்.

மொத்தமாக வந்த 64 ஆயிரத்து 713 ரூபாயில் முன்பணம் 15 ஆயிரம் ரூபாய் கழித்தது போக மீதம் உள்ள 49 ஆயிரத்து 713 ரூபாயை கேஸ்சா கொடுக்கிறீங்களா இல்ல கார்டுல செலுத்துரீங்களா? என மருத்துவமனை நிர்வாகம் கேட்க.. இந்த கட்டண கொள்ளை குறித்து போலீசில் புகாரா கொடுக்க போகிறோம்னு சொன்னதும், கட்டணத்தில் கால் பகுதியை குறைத்துள்ளது இந்த பகல் கொள்ளை மருத்துவமனை நிர்வாகம்..!

அதன்படி 6 மணி நேரம் மட்டுமே ஐசியூவில் இருந்ததால் ஐ.சி.யு கட்டணம் 9 ஆயிரத்து 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 3 மருத்துவர்களுக்குறிய கட்டணமும் 3 ஆயிரத்து 500 ஆக சுருங்கி போனது, மற்றும் மொத்த கட்டணத்தில் மருத்துவமனை சேர்மனான மருத்துவர் சண்முகம் 7 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கி இருக்கிறார். ஆக ஏற்கனவே கொடுக்கப்பட்ட பில்லில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் குறைக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து 28 ஆயிரத்து 13 ரூபாய் செலுத்தி விட்டு சரோஜாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு பெரிய கும்பிடு போட்டு வெளியே வந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் அட்மின் கார்த்திக் என்பவரிடம் விளக்கம் கேட்ட போது அவர் தங்கள் மருத்துவமனையின் சேர்மன் மட்டுமே இதுபற்றி விளக்கம் அளிப்பார் என்று கூறி நழுவினார். இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குனர் குருனாதன், அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக தனியார் மருத்துவமனைகளும் கட்டண கொள்ளை விவகாரத்தில் கடிவாளம் இல்லா குதிரை போல தறிகெட்டு ஓடிக்கொண்டு இருக்கின்றது என்பதற்கு சாட்சியாக அரங்கேறி இருக்கின்றது இந்த சம்பவம்..!

– சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button