பழனி அருகே தனியார் நிறுவனத்தில் தொடரும் மர்ம மரணங்கள்…!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அத்திவலசு கிராமத்தில் கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனமான சாந்தி பீட்ஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ,700க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் ஒருவர் பின் ஒருவராக குறுகிய கால இடைவெளியில் மர்மமான முறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையிலும், மற்றொருவர் வேறு ஏதோ மர்ம காரணங்களாலும் இறந்திருப்பதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த திங்களன்று அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த செல்லமுத்து என்ற வாலிபர் பணியின் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் செல்லமுத்துவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் என தெரிகிறது.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் காலம் தாழ்த்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் தான் அவர் இறந்து விட்டதாக ஒரு சிலர் குற்றச்சாட்டி வரும் நிலையில், அந்த நிகழ்ச்சியின் அதிர்ச்சி அடங்கும் முன்னரே சாந்தி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் காரத்தொழுவு என்ற இடத்தில் செல்வராஜ் (வயது 55)என்ற நபரின் மீது மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த தொடர் சம்பவங்கள், மர்மமான மரணங்கள் இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தினசரி இறைச்சி வெட்டும் பொழுது தங்களது கை விரல்கள் துண்டாகி விரல்களை இழப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப் படுகிறதா?, எதிர்காலங்களில் இங்கு பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பு நிலைமை கேள்விக்குரியாக உள்ளது.தொடரும் மர்ம மரணங்கள், பதியப்படும் வழக்குகள், முடிக்கப்படும் விதம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது
தி.கார்வேந்தபிரபு.