300 ரூபாய் கொடுத்தால் போலி ரேஷன் கார்டுகள் தயார் !
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் அரசுக்குப் போட்டியாக ரேசன் ஸ்மார்ட் கார்டு அச்சடித்து விற்றுவந்த மோசடி கும்பல் கையும் களவுமாக வட்டாட்சியரிடம் சிக்கியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலையில் தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்.எம்.எஸ் என்ற தனியார் கணினி மையம் ஒன்றில் 300 ரூபாய் கொடுத்தால் போலி ரேஷன் கார்டுகள் தயார் செய்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் சென்றது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆர்.எம்.எஸ் கணினி மையத்திற்கு சென்று தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சாருலதா மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது அங்கு 6 பெண்களை வேலைக்கு வைத்து வாடிக்கையாளர்களிடம் விவரங்களை பெற்றுக் கொண்டு போலியாக ஸ்மார்ட் கார்டுகள் தயாரித்து கொடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கிருந்து பார்கோடுரீடருடன் ஏராளமான போலி ரேசன் ஸ்மார்ட் அட்டைகளை கைப்பற்றிய வட்ட வழங்கல் அலுவலர் சாருலதாகாவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
கணினி மையத்தின் சுவற்றில் ரேசன் ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்து தரப்படும் என்பதை துண்டு பிரசுரமாகவே ஒட்டிவைத்திருந்தனர். காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தியபோது கடையில் உரிமையாளரான முகமது சம்ஜீத் கொடுத்த விளக்கம் தான் சோதனையின் ஹைலைட்..!
தான் போலியாக கார்டுதயாரிக்கவில்லை என்றும் கலர் ஜெராக்ஸ் மட்டுமே எடுத்து கொடுப்பதாகவும், அந்த ஜெராக்சில்பார்கோடு ரீடர் ஒர்க் ஆவதாகவும் கூறி வியக்க வைத்தார்.
இதனைக் கேட்டதும் அங்கு நடந்த சட்டவிரோத ரேசன் கார்டு தயாரிப்பு உறுதி செய்யப்பட்டது. உடனடியாக போலி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டர், லேப்டாப், அச்சடிக்கபட்ட 33 போலி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கடையின்உரிமையாளர் முஹம்மது சம்ஜித் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக இந்த கடையை நடத்திவருவதாகவும்.இவருக்கு காட்டுமன்னார்கோவிலில் மேலும் இரண்டு கடைகள் இதே போன்று செயல்பட்டு வருவதும்தெரியவந்தது. கடந்த ஓராண்டாக தமிழக அரசு ஸ்மார்ட் குடும்ப அட்டை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளநிலையில் இந்த கணினி மையத்தில் சட்டவிரோதமாக போலி கார்டுகள் தயாரானது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கமாக தமிழ்நாடு உணவு பொருள்வழங்கல் துறை இணையதளத்திற்கு சென்று புதிய கார்டு மற்றும் தொலைந்து போன கர்டு விவரங்களை பதிவு செய்துவிட்டால் தாலுகா வட்ட வழங்கல் அலுவகத்திற்கு நகல் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும் இத்த தகவல் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர் அரசுக்கு 20 ரூபாய் செலுத்தி புதிய கார்டை பெற்றுக்கொள்வார். அதுவும் கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை அச்சிடும் பணி இன்னும் தொடங்கவே இல்லை. சென்னையில் மட்டுமே நடக்கிறது.
இதற்கிடையே கணினிமைய உரிமையாளருக்கு ஆதரவாக ஜமாத்தார்கள் என சிலர் களம் இறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக அதிகாரத்தில் உள்ள முக்கிய பிரமுகர் மிரட்டியதால் பயந்து போன வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா, போலி ரேசன் அட்டை தயாரித்து ஆதாரங்களுடன் சிக்கியவர் மீது புகார் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு சொல்வதாக கூறிச்சென்றதால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
அரசுக்கு போட்டியாக போலியாக ரேசன் அட்டை அடித்தவர்களையே மிரட்டலுக்கு பயந்து விடுவித்தால், நாளை ரூபாய் நோட்டுக்கள் கூட ஈசியாக அச்சடிக்கப்படும் என்பதே கசப்பான உண்மை..!
– அருள்ராஜ்