மன்னிப்பு கேட்ட கே.வி.பி. வங்கி !
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். இவர் அப்பகுதியிலுள்ள கே.வி.பி வங்கியின் வாடிக்கையாளராக உள்ளார். அண்மையில் காசோலை புத்தகம் தீர்ந்துபோனதால், புதிதாக காசோலை புத்தகம் கேட்டு வங்கியை அவர் அணுகியுள்ளார். அப்போது வங்கி கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்தால் தான் புதிதாக காசோலை புத்தகம் தரமுடியும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆகையால் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு முரளி கிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்திற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி காசோலை புத்தகம் வழங்குவதற்கு, செல்போன் எண் அவசியமில்லை என தெரிவித்ததோடு, முரளி கிருஷ்ணனுக்கு உடனடியாக காசோலை புத்தகம் வழங்கவும் சம்மந்தப்பட்ட கே.வி.பி.வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து வங்கியும் அவருக்கு காசோலை புத்தகத்தை அனுப்பியுள்ளது.
ஆனால் காசோலை புத்தகம் வழங்காமல் இழுத்தடித்த வங்கியின் இந்த நடவடிக்கையால், தன்னால் சில மாதம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை என்றும், ஆகையால் இதற்கு நஷ்ட ஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் முரளிகிருஷ்ணன். இந்நிலையில் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறி முரளி கிருஷ்ணனுக்கு வங்கியின் தரப்பில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
- பாஸ்கர்